குஜராத்தில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் மட்டுமே வெற்றி

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: கடந்த 1980-ல் குஜராத் சட்டப்பேரவைக்கு 12 முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பிறகு இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முகமது ஜாவேத் பிர்சாடா, கியாசுதீன் ஷேக், இம்ரான் கெடவாலா ஆகிய 3 பேர் குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்தலில் இவர்களையும் சேர்த்து 6 பேருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்தது.

இவர்களில் ஜமால்பூர் காடியா தொகுதியில் போட்டியிட்ட அத்தொகுதி எம்எல்ஏவான இம்ரான் கெடவாலா மட்டும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மற்ற 2 எம்எல்ஏக்கள் உட்பட 5 பேரும் தோல்வி அடைந்தனர். ஜமால்பூர் காடியா தொகுதியில் சவாலாக விளங்கிய பாஜக மற்றும் ஏஐஎம்ஐஎம் வேட்பாளர்களை இம்ரான் கெடவாலா தோற்கடித்துள்ளார்.

தாரியாபூர் தொகுதி, 46 சதவீத முஸ்லிம் வாக்குகளை கொண்டுள்ள போதிலும் இங்கு பாஜக வேட்பாளர் கவுஷிக் ஜெயினிடம் காங்கிரஸ் எம்எல்ஏ கியாசுதீன் ஷேக் தோல்வி அடைந்தார். காங்கிரஸின் மற்றொரு முஸ்லிம் எம்எல்ஏவான முகமது ஜாவேத் பிர்சாடா, வான்கனேர் தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி யடைந்தார். குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் நிறுத்தப்பட்ட 3 முஸ்லிம் வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “குஜராத் தேர்தல் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. பாஜக, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் ஆகிய 3 கட்சிகளின் அறிவிக்கப்படாத கூட்டணியை, எதிர்த்து காங்கிரஸ் போராட வேண்டியிருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE