வீடு தேடி ரேஷன் திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் பாஜக - ஆம் ஆத்மி மோதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை நேற்று காலை கூடியதும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸை அளித்தார். வரும் 2022-23-ம் கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உதவித் தொகையை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று அவர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல பொது சிவில் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. ஹர்நாத் சிங் நோட்டீஸ் அளித்தார்.

நீதித் துறையில் மத்திய அரசின் தலையீடு அதிகரித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜு, காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து அரசு துறைகளையும் காங்கிரஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பாஜக ஆட்சியில் அரசு அமைப்புகள் தன்னிச்சையாக செயல்படுகின்றன" என்று தெரிவித்தார்.

மசோதாக்கள்: பொது சிவில் சட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் பாஜக எம்.பி. கிரோரி லால் மீனா, தனிநபர் மசோதாவை நேற்று தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பழங்குடியினர் பட்டியல் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா மாநிலங்களவையில் அறிமுகம் செய்தார். இந்த மசோதாவின்படி தமிழகம், கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சலின் குறிப்பிட்ட சமுதாய மக்கள் பயன் அடைவார்கள். மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு சார்பில் வீடு தேடி ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மி எம்.பி.க்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் பேசும் போது, “வீடு தேடி ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய நுகர்வோர், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் பதில் அளித்தார். அவர் கூறும்போது, “டெல்லி பொது விநியோக திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாகவே வீடி தேடி ரேஷன் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சி, திருடர்களின் கட்சி" என்று தெரிவித்தார். இதற்கு ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. அவையில் கடுமையான அமளி நிலவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE