பிரதமருக்கு வெளிநாட்டு ஊடகங்கள் புகழாரம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றி பெற்றிருப்பதற்கு பிரதமர் மோடியே காரணம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.

இங்கிலாந்தின் முன்னணி ஊடகமான பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில், “குஜராத் முதல்வராக இருந்த மோடி 2014-ல் இந்திய பிரதமராக பதவியேற்றார். அவர் டெல்லிக்கு இடம்பெயர்ந்த போதிலும் அவரது செல்வாக்கால் குஜராத் தேர்தலில் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. பிரதமர் மோடி தனித்துவமானவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் முன்னணி நாளிதழ் தி இன்டிபென்டென்ட் வெளியிட்ட செய்தியில், “பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பாஜக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றிருக்கிறது. வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு இது ஊக்க சக்தியாக அமையும்" என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னணி ஊடகம் சிஎன்என் வெளியிட்டுள்ள செய்தி யில், “குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றி பெற்றிருக்கிறது. பிரதமர் மோடி மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும் அவரது செல்வாக்கு தொடர்ந்து அதிகரிக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் அரசு ஊடகம் அல் ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில், “பிரதமர் மோடியின் பாஜக கட்சி குஜராத்தில் வரலாறு காணாத வெற்றி பெற்றிருக்கிறது. குஜராத்தில் 27 ஆண்டுகள் ஆட்சி செய்யும் அந்த கட்சி மீண்டும் வெற்றிவாகை சூடியிருக்கிறது. இந்த வெற்றி 2024 தேர்தலில் எதிரொலிக்கக் கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானை சேர்ந்த நிக்கி ஆசியா இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், “குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தில் 7-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது" என்று புகழாரம் சூட்டியுள்ளது.
சிங்கப்பூரின் தி ஸ்ட்ரேட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியில், “பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக கட்சி, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி அந்த கட்சிக்கு ஊக்க சக்தியாக அமையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE