மதரசாக்களில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் படிக்கிறார்களா? - ஆய்வு செய்ய மாநில அரசுகளுக்கு என்சிபிசிஆர் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மதரசாக்களில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் படிக்கிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்ய, மாநில அரசுகளுக்கு NCPCR எனப்படும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக NCPCR அமைப்பின் தலைவர் பிரியங்க் கனூங்கோ, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், "அரசு நிதி உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட மதரசாக்களில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் படிப்பதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. மதரசாக்கள் குழந்தைகளுக்கு முக்கியமாக மத கல்வியை வழங்கக்கூடியவை. அங்கீகரிக்கப்பட்டவை, அங்கீகாரம் பெறாதவை, ரகசியமாக இயங்கக்கூடியவை என மூன்று வகையான மதரசாக்கள் உள்ளன.

அரசு நிதி உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட மதரசாக்களில் மதக் கல்வி மட்டுமல்லாது வழக்கமான கல்வியும் கற்பிக்கப்படுவதை அறிய முடிகிறது. சில மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மதரசாக்களில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகைகூட வழங்குகின்றன.

பெற்றோரின் சம்மதம் இன்றி குழந்தைகளுக்கு கட்டாய மதக்கல்வி வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்குவது சட்டவிரோதம். அரசியல் சாசனத்தின் பிரிவு 28(3) இதை தெளிவுபடுத்துகிறது. இதேபோல், 2009ல் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டப்படி 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவது கட்டாயம். அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி பயில்வதற்கான உரிமை குழந்தைகளுக்கு உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட, அரசு நிதி உதவி பெறக்கூடிய மதரசாக்களில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் கல்வி பயில்கிறார்களா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சட்டம் வலியுறுத்துகிறது. எனவே, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இது குறித்த நேரடி ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அதோடு, இந்த மதரசாக்களில் அவ்வாறு முஸ்லிம் அல்லாத மாணவர்கள் கல்வி பயில்வது கண்டறியப்பட்டால் அவர்களை, பொது கல்வி அளிக்கும் கல்வி நிறுவனங்களில் சேர்க்க வேண்டும்.

மேலும், ரகசியமாக மதரசாக்கள் இயங்குகின்றனவா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு இயங்குவது கண்டறியப்பட்டால் அங்கு பயிலும் அனைத்து மாணவர்களையும் உடனடியாக பொதுக் கல்வி அளிக்கும் கல்வி நிறுவனங்களில் சேர்க்க வேண்டும். அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் இந்த ஆய்வை மேற்கொண்டு அது குறித்த செயல் அறிக்கையை 30 நாட்களுக்குள் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்." இவ்வாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE