முதல்வர் யார்? - இமாச்சல் காங்கிரஸ் இன்று முக்கிய ஆலோசனை

By செய்திப்பிரிவு

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய இன்று கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் கூடுகிறது. ஆனால், முதல்வராக நிறைய பேர் விருப்பம் தெரிவித்துள்ளதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்றன. இறுதியில் காங்கிரஸ் 40 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பாஜக வேட்பாளர்கள் 25 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். பாஜக மூத்த தலைவரும், முதல்வருமான ஜெய்ராம் தாக்குர், செராஜ் தொகுதியில் 52,076 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் சேத் ராமுக்கு 15,069 வாக்குகள் கிடைத்தன. தேர்தல் தோல்வியை ஏற்று முதல்வர் ஜெய்ராம் தாக்குர் நேற்று மாநில ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இந்நிலையில் இன்று இமாச்சல் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் மதியம் மூன்று மணியளவில் எம்எல்ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஹிமாச்சல் காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜிவ் சுக்லா, சத்திஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் புபிந்தர் ஹூடா ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் பிரதீபா சிங் தலைமை வகிப்பார். முன்னதாக எம் எல் ஏக்களை சண்டிகர் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால் அது கைவிடப்பட்டு தற்போது எம்எல்ஏக்கள் சிம்லாவிலேயே உள்ளனர்.

முதல்வராகும் போட்டியில் சுக்வீந்தர் சிங் சுகு, பிரதீபா சிங், முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோரின் பெயர் அடிபடுகிறது. இவர்களில் மக்களவை எம்.பி. பிரதீபா சிங் முக்கியமானவராக உள்ளார். இவர் இமாச்சல் காங்கிரஸின் முக்கியமானவராக மாநிலத்தின் நீண்ட கால முதல்வராக இருந்த வீர்பத்ர சிங்கின் மனைவியாவார். வீர்பத்ர சிங் கடந்த ஆண்டு மறைந்துவிட்டார். இருப்பினும் அவரது மனைவியான பிரதீபா சிங்கிற்கு கட்சிக்குள் ஸ்திரமான ஆதரவு இருக்கிறது. தற்போது மக்களவை எம்.பி.யாக இருந்தாலும் கூட பிரதீபா இமாச்சல் காங்கிரஸ் பிரச்சாரத்தில் பெரும் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் முதல்வராகவே வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக பிரதீபா சிங்கின் மனும் சிம்லா கிராமப்புற தொகுதியில் வெற்றிபெற்றவருமான விக்ரமாதித்ய சிங், "ஒரு மகனாக நான் பிரதீபா சிங் முதல்வராக வர வேண்டும் என்று விரும்புவது இயல்பே. ஆனால், கட்சியின் ஒரு பொறுப்புள்ள உறுப்பினர் என்ற முறையில் கட்சி என்ன முடிவெடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன். கட்சி நிச்சயமாக மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு எடுக்கும் என நம்புகிறேன்" என்றார்.

இந்நிலையில் சற்று முன்னர் பிரதீபா சிங் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் தன்னால் நிச்சயமாக இமாச்சலப் பிரதேச முதல்வராக சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE