குஜராத்தில் காங்கிரஸ் படுதோல்விக்கு ஆம் ஆத்மியும், ஒவைசியும் காரணமா? - ஒரு பார்வை

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. அதேவேளையில் குஜராத்தில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸின் இந்தத் தோல்வி விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. குஜராத் தேர்தலை காங்கிரஸ் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றும், ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் போன்ற கட்சிகளின் தீவிர பிரச்சாரத்தால் காங்கிரஸ் வாக்குகள் சிதறின என்றும் வாதங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன. ஒவைசியின் பிரச்சாரத்தால் அவருடைய கட்சிக்கு வாக்குகள் சேராவிட்டாலும், அது காங்கிரஸின் வாக்குகளை பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் மடைமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆமோதிக்கும் குஜராத் காங்கிரஸ்: இந்தத் தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜகதீஷ் தாக்கோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மியும், அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் பிரித்துவிட்டன. ஊடகங்களில் வரும் விமர்சனங்களை நாங்கள் ஆமோதிக்கிறோம். விரைவில் நாங்கள் கூடி இதுதொடர்பாக ஆலோசிக்கவிருக்கிறோம்" என்றார். தோல்விக்குப் பொறுப்பேற்று குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் பொறுப்பாளர் ரகுசர்மா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். வாக்கு எண்ணிக்கை நாளன்று காலையில் இருந்தே வெறிச்சோடி கிடக்கும் குஜராத் காங்கிரஸ் அலுவலகம் தோல்வியை ஆலோசிக்காவாவது சுறுசுறுப்பாக இயங்குமா என்பதே காங்கிரஸ் அனுதாபிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆம் ஆத்மி மிஷன் நிறைவேறியது... - யோகேந்திர யாதவ்: குஜராத் தேர்தலில் காங்கிரஸின் மோசமான முடிவு குறித்தும் இனி காங்கிரஸ் முன்னெடுக்க வேண்டிய தேர்தல் அரசியல் குறித்தும், காங்கிரஸின் தோல்விக்கு ஆம் ஆத்மி எப்படியெல்லாம் பங்களித்துள்ளது என்பது பற்றியும் விரிவாகப் பேசியுள்ளார் ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ். ஆம் ஆத்மி ஆரம்பிக்கப்பட்டபோது இவரும் அதனை நிறுவியர்களில் ஒருவராக இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மியால் என்ன செய்ய முடியும்? - "குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு இந்த தேசத்திற்கு ஒரு தேர்தல் என்ன செய்யக்கூடும் என்பதை பட்டவர்த்தமாகக் காட்டியுள்ளது. அதில் ஆம் ஆத்மி அதற்குக் கொடுக்கப்பட்ட செயலை நேர்த்தியாக நிறைவேற்றியுள்ளது. ஆம் ஆத்மிக்கான வேலை காங்கிரஸை அழிப்பது மட்டுமே. பாஜகவின் நீண்ட கால கனவு காங்கிரஸ் இல்லாத பாரதம். அந்த இலக்கை கனவை நனவாக்க ஆம் ஆத்மி தனது காங்கிரஸ் எதிர்ப்பு, காங்கிரஸ் அழிப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.

டெல்லி மாநகராட்சித் தேர்தல், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல், இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த மூன்றையும் நாம் ஒன்றாக எடுத்து பகுப்பாய்வு செய்யலாம். டெல்லியில் பாஜக மீதான எதிர்ப்பலை ஆம் ஆத்மிக்கு வாக்காக மாறியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆளும் பாஜக மீது மக்களுக்கு இருந்த கடுமையான எதிர்ப்பலைகள் காங்கிரஸுக்கு வாக்காக மாறியுள்ளது.

காங்கிரஸ் இன்னும் கூட சிறப்பான வாக்குகளைப் பெற்றிருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதுபோல் குஜராத்தில் ஆளும் பாஜக மீது அதிருப்தி இருந்தாலும் கூட பாஜக இமாலய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. மூன்று இடங்களிலுமே தேர்தலுக்காக மக்களிடம் எடுத்துச் செல்ல ஒரு தகவல் இருந்தது. அதை கொண்டு சேர்க்க ஒரு தலைவர் இருந்திருக்கிறார். குஜராத்தில் பாஜகவின் வாக்கு வங்கி முன்பை அதிகரித்துள்ளது என்பது கூர்ந்து கவனிக்க வேண்டியது. இதற்கு ஆம் ஆத்மியும் ஒரு காரணம்" என்று யோகேந்தர் யாதவ் கூறியுள்ளார்.

ஒரு தலைவன் அவசியம்: தொடர்ந்து பேசிய அவர், "இப்போது நாம் கருத்தில் கொள்ள வேண்டியது எல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு வலுவான எதிரணியாக திரள்வதைவிட ஒரு வலுவான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். குஜராத்தில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸுக்கு மக்களிடம் சொல்லத் தகவலும் இல்லை. அதைக் கொண்டு சேர்க்க தலைவனும் இல்லை. பாஜகவை வீழ்த்த வேண்டுமானால் ஒரு தெளிவான ஒரு ஆழமான அடர்த்தியான பிரச்சாரம் வேண்டும்.

நான் இப்போது ராஜஸ்தானின் கோட்டா நகரில் இருந்து பேசுகிறேன். கோட்டா நகரம் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதில் பல நவீன உத்திகளை வகுத்து ஒரு மாடல் நகராக இருக்கிறது. கோட்டா நகரம் இந்திய தேர்வுகளுக்கு என்ன செய்துள்ளதோ அதைத்தான் பாஜக இந்திய தேர்தலுக்கு செய்துள்ளது. என் காலத்தில் நான் வெறும் புத்தகத்தை படித்துவிட்டு தேர்வை சந்திப்பேன். ஆனால் கோட்டா நகர பயிற்சி மையங்கள் மாணவர்களுக்கு தேர்வு உத்திகளை சொல்லித் தருகிறது. அதனால் இன்றைய காலக்கட்டத்தில் தேர்தலை வெல்ல வெறும் பொதுக்கூட்டமும், பிரச்சாரமும், பேரணிகள், யாத்திரைகளும் மட்டும் போதாது. தேர்தலில் வெல்ல ஒரு உத்தியாளர் தேவை. சமூக ஊடக ஆர்மியும் தேவை. இலக்குகளை குறிவைத்து பிரச்சாரம் செய்யும் வழிவகைகள் தேவை. இதையெல்லாம் 2024 தேர்தலில் அமையவுள்ள பாஜகவின் எதிரணி செய்தே ஆக வேண்டும்.

ஆனால், இந்த மூன்று தேர்தல்களையும் வைத்துப் பார்க்கும்போது ஒரு விஷயம் நேர்மறையானதாகத் தோன்றுகிறது. பாஜகவை ஆம் ஆத்மியும் வீழ்த்த முடியும். பாஜகவை காங்கிரஸும் வீழ்த்த முடியும் என்பதே அது. பாஜகவை எதிர்க்கும் சக்திக்கு ஒரு கொள்கையும், ஒரு தலைவரும், ஒரு நல்ல செயல்பாட்டுத் திறன் கொண்ட இயந்திரம் இருந்தால் போதும் அதை எளிதாக வென்று விடலாம்.

காங்கிரஸ் மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை நிச்சயமாக ஒரு நல்ல இயந்திரம் தான். ஆனால் அது ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தைப் பார்க்க வேண்டும். இது செப்டம்பர் மாதம் ஆரம்பித்துள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த யாத்திரை தேர்தல் அரசியலுக்குப் பயன்படுமா என்றால் பயன்படாது என்பதே உண்மை. இந்த யாத்திரையை காங்கிரஸ் குஜராத், இமாச்சல் தேர்தலுடன் தொடர்புபடுத்தாது மதிநுட்பம் நிறைந்த முடிவு. ஆனால் 2024 தேர்தலில் இந்த யாத்திரையின் பலன் எதிரொலிக்க வேண்டும். அப்போது இந்த யாத்திரை வாக்குகளே எதிரொலிக்க வேண்டும். ஆனால் இந்த யாத்திரையை 2024ல் வாக்குகளாக மாற்ற நிச்சயமாக நான் சொன்னது போல் கோட்டா ஸ்டைல் தேர்வு முறையைப் போல் நிறைய மெனக்கிடல்கள் வேண்டும்.

குஜராத் தேர்தல் வேளையில் யாத்திரை முக்கியமா என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அப்படி நேரடியாக தொடர்புபடுத்த முடியாது. இந்த யாத்திரைக்கு முன்னரே குஜராத் காங்கிரஸில் பல்வேறு பிரச்சினைகள் கவனிக்கப்படாமல் இருந்தன. அப்போதே தோல்விக்கான அடித்தளம் அங்கே அமைக்கப்பட்டுவிட்டது. ஒரு தகவலும், ஒரு தலைவனும் இல்லாத நிலை தான் தோல்விக்குக் காரணம்" என்று கூறினார்.

பாஜகவின் பிரச்சாரத்தை உடைக்க வேண்டும்: "இந்திய ஒற்றுமை யாத்திரையை நான் தேர்தலுடன் தொடர்புப்படுத்திப் பார்க்கவில்லை. இது நிச்சயமாக பாஜகவின் பிரச்சாரத்தை உடைக்க கையில் எடுக்கப்பட்டுள்ள யாத்திரை. பாஜக தேசத்தில் ஒரு வலுவான பிரச்சாரத்தை ஊடுருவச் செய்துள்ளது. இங்கே எல்லாம் இந்து, முஸ்லிம் என வரையறுக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் பிரித்துப்பார்க்க முடியும் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. வெறுப்புப் பிரச்சாரங்கள் மேலோங்கியுள்ளது. இதனை உடைக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு இந்த யாத்திரையின் மிஷனாக இருக்க முடியும்" என்று யோசனை தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேசத் தேர்தலின் போது ஒவைசி அங்கு சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். அவை சமாஜ்வாதிக்கும், பாஜகவுக்கும் ஆதரவு ஓட்டுகளாக மாறின. இப்போது குஜராத்திலும் அதுபோலவே காங்கிரஸ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுள்ளன என்று குஜராத் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தங்களின் உளக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்