மத்திய அரசால் தெலங்கானாவுக்கு ரூ.3 லட்சம் கோடி நஷ்டம்: முதல்வர் சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு

By என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஜெகத்தியாலாவில் நேற்று நடைபெற்ற டிஆர்எஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் பேசியதாவது: நம்முடைய பிரதமர் ஊர் சுற்றுவதைத் தவிர எதையும் உருப் படியாக செய்தது கிடையாது. கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசால் தெலங்கானா மாநிலத்துக்கு சுமார் ரூ.3 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நம்மைச் சுற்றிலும் சில ‘கோல்மால் கோவிந்தன்கள்’ சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.ஜாக்கிரதையாக இருங்கள்.

ஒரு சிறிய தவறால் நாம் ஏற்கெனவே 60 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றோம். தற்போது நாம் தெலங்கானா மாநிலத்தை உருவாக்கி சாதித்துக் காட்டியுள்ளோம். அதனால்தான் ஜெகத்தியாலா மாவட்டமே உருவானது. தெலங்கானா ஒரு ஆன்மிக மாநிலமாகும். அதிக கடவுள் பக்தி உள்ள மக்கள் இங்கு வசிக்கின்றனர். ஆதலால், கொண்டகட்டு மலையில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் கோயில் ரூ.100 கோடி செலவில் பிரம்மாண்டமாக புதுப்பிக்கப்படும். யாதாத்ரி நரசிம்மர் கோயில் போன்று இந்த ஆஞ்சநேயர் கோயிலும் மிக பிரம்மாண்டமாக கட்டப்படும்.

விவசாயத்துக்கு இங்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. அப்படியிருக்கையில், மின் மோட்டர்களுக்கு மீட்டர் பொருத்து வோம் என மத்திய அரசு கூறி வருகிறது. தெலங்கானாவில் மட்டுமே பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கப்படுகிறது. பிரதமர் மோடியால் எந்தத் துறையும் வளர்ச்சி அடைய வில்லை. ‘மேக் இன் இந்தியா’ எனக் கூறிய பிரதமர் அதையாவது அமல்படுத்துகிறாரா? தீபாவளி, கார்த்திகை தீபத்துக்கு சீனா தயாரித்த விளக்குகளை பயன்படுத்துகிறோம்.

கடந்த 8 ஆண்டுகளில், ரூ.14 லட்சம் கோடியை வாராக்கடன் பெயரில் மக்கள் பணத்தை மத்திய அரசு பிடுங்கிக் கொண்டது. எல்ஐசியில் 25 லட்சம் முகவர்கள் பணியாற்றி வருகின்றனர். ரூ.35 லட்சம் கோடி மதிப்புள்ள எல்ஐசியை விற்க மத்திய அரசு முயற்சிக்கிறது. மின்வாரியத்தையும் தனியாருக்கு தாரை வார்க்க ஆலோசித்து வருகிறது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடு விழா கண்டு, 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE