தந்தைக்கு சிறுநீரகம் தானமளித்த லாலுவின் மகள் - பாராட்டிய பாஜக தலைவர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ்க்கு சிறுநீரக தானம் தந்த அவரது மகள் ரோஹினி ஆச்சாரியாவை பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங் பாராட்டி உள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும் பிகார் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவின் சிறுநீரகங்கள் செயலிழந்ததை அடுத்து, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், யார் அவருக்கு சிறுநீரகம் தருவது என்ற கேள்வி வந்தபோது இதற்கு பதிலாக அவரது மகள் ரோஹினி ஆச்சாரியா வந்தார். ரோஹினியின் சிறுநீரகம் லாலுவுக்கு பொருந்திப் போகும் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதை அடுத்து, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

மனைவி ராப்ரி தேவியுடன் லாலு பிரசாத் யாதவ்

இதையடுத்து, லாலுபிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகனும் பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், லாலுவின் மகள்கள் மிசா பாரதி, ரோஹினி ஆச்சாரியா உள்பட ஒட்டுமொத்த குடும்பமும் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றன. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பாக ரோஹினி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "நாங்கள் கடவுளைப் பார்த்தில்லை. ஆனால் கடவுளாக தந்தையைத்தான் எங்கள் பார்க்கிறோம்" என தெரிவித்திருந்தார். மற்றொரு பதிவில், "அறுவை சிகிச்சைக்குத் தயாராகி இருக்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவியுங்கள்" என குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் ஷேர் செய்திருந்தார்.

மருத்துவமனையில் ரோஹினி

இந்நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வேற்று வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள மிசா பாரதி, "அறுவை சிகிச்சை முடிந்ததும் ஐசியூவில் இருந்து அப்பா வெளியே அழைத்து வரப்பட்டார். அப்பாவும், அப்பாவுக்கு சிறுநீரகம் தானமளித்த எனது அக்காவும் நன்றாக இருக்கிறார்கள். உங்கள் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிராஜ் சிங்

இந்நிலையில், ரோஹினி ஆச்சாரியாவுக்கு பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நீங்கள் உதாரணமான மகள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். வரும் தலைமுறையினருக்கு நீங்கள் உதாரணமாக திகழ்வீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE