புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவைக்கு 2-வது மற்றும் இறுதி கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 58.68% வாக்குகள் பதிவாகி உள்ளன. குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த 2 மாநிலங்களிலும், ஆளும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 63.14% வாக்குகள் பதிவானது. இதையடுத்து, 2-வது மற்றும் இறுதி கட்டமாக, 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 60 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 2.54 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் தனது சகோதரர் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இசுதான் காத்வி ஆகியோர் வாக்களித்தனர்.
இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்றது. மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. மாலை 5 மணி நிலவரப்படி 58.68% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் கடந்த முறை பாஜக, காங்கிரஸ் இடையே இருமுனைப் போட்டி நிலவியது. இந்த முறை பாஜக,காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இமாச்சல் தேர்தல்: முன்னதாக, 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு பாஜக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8-ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்று மதியமே எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது தெரிந்துவிடும்.
கருத்துக் கணிப்புகள்: இதற்கிடையில், தேர்தலுக்கு பிந்தையகருத்துக் கணிப்புகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 92 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் பாஜக எளிதாக அறுதிப் பெரும்பான்மையை பெறும். கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றி பெறும். அக்கட்சிக்கு இது வரலாற்று வெற்றியாக அமையும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு: அனைத்து கருத்துக் கணிப்புகளையும் ஆய்வு செய்து என்டிடிவி செய்தி நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், குஜராத்தில் பாஜக 131, காங்கிரஸ் 41, ஆம் ஆத்மி 7 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குஜராத்தில் 7-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது.
இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 35 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இங்கு ஆளும் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருக்கும்.
எனினும் காங்கிரஸைவிட அதிக இடங்களை கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கருத்துக் கணிப்புகளையும் ஆய்வு செய்து என்டிடிவி செய்தி நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இமாச்சல பிரதேசத்தில் பாஜக 35, காங்கிரஸ் 29 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago