ஜி-20 தலைமையை ஏற்றது இந்தியா: 56 நகரங்களில் 200 மாநாடுகளை நடத்த திட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா நேற்று அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது. இதையொட்டி நாடு முழுவதும் 56 நகரங்களில் 200 மாநாடுகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த 1999-ம் ஆண்டில் ஜி-20 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில்,ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த அமைப்பின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் மாறுகிறது. கடந்த ஓராண்டாக இந்தோனேசியா தலைமை வகித்தது. இதைத் தொடர்ந்து ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா நேற்று அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள கட்டுரையில், "இந்த யுகத்தில் போருக்கு அவசியமில்லை. போரினால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணமுடியாது. ஒற்றுமையாக செயல்பட்டால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைன் போரால் சர்வதேச நாடுகள் இரு அணிகளாக பிரிந்துள்ளன. அமெரிக்கா தலைமையில் ஓரணியும் ரஷ்யா தலைமையில் எதிரணியும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இரு அணிகளுக்கும் இடையே நட்பு பாலமாக இந்தியா செயல்படுகிறது.

உக்ரைன் போருக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக ரஷ்யா, உக்ரைன் அதிபர்களுடன் பலமுறை அவர் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார்.

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது "இது போருக்கான காலம் அல்ல" என்று நேர்பட பேசினார். இதை ஆமோதித்த அதிபர் புதின், போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தற்போது ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள கட்டுரையில், "போரை தவிர்ப்போம், ஒற்றுமையாக செயல்படுவோம்" என்று மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா கூறியதாவது: பல்வேறு சவால்களை உலகம் எதிர்கொண்டிருக்கிறது. ஜி-20அமைப்பின் ஓராண்டு கால தலைமையில் மனித குலம் எதிர்கொண்டிருக்கும் சவால்கள், பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும். இதை கருத்தில் கொண்டே ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

ஜி-20 தொடர்பான மாநாடுகள் தலைநகர் டெல்லி மட்டுமன்றி நாடு முழுவதும் நடத்தப்படும். 56 நகரங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாநாடுகள் நடத்தப்படும். ஜி-20 மாநாடுகளை நடத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: உலக நாடுகளிடம் கருத்து வேறுபாடுகள் அதிகம் உள்ளன. வெவ்வேறு கொள்கை, சிந்தனை கொண்ட நாடுகளை ஓரணியில் திரட்டுவது கடினம். அண்மையில் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்த பிரச்சினை எதிரொலித்தது.

இந்தியா போன்ற நடுநிலையான நாடுகள், உலக நாடுகளை ஓரணியில் திரட்ட தீவிர முயற்சி செய்து வருகின்றன. சர்வதேச அரங்கில் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளின் குரலே ஓங்கி ஒலிக்கின்றன. தற்போது தெற்கத்திய நாடுகளின் பிரதிநிதியாக இந்தியா குரல் கொடுக்கிறது. ஜி–20 அமைப்பின் தலைமை பொறுப்பின்போது இந்தியாவின் அனுபவங்கள், வழிகாட்டுதல்கள் ஒட்டுமொத்த உலகத்துக்கும் நன்மை அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா ஆதரவு

அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் கூறியதாவது: ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பதற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்போம். சர்வதேச அளவில் உணவு, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார தேக்கநிலை நீடிக்கிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியாவுக்கு பக்கபலமாக இருப்போம்.

ஜி-20 மாநாடுகளில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவுக்கு பயணம் செய்வது தொடர்பாக இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்