முதல்கட்ட தேர்தலில் 89 தொகுதிகளில் 788 வேட்பாளர்கள் போட்டி: குஜராத்தில் 59% வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நேற்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில், 89 தொகுதிகளில் 59 சதவீத வாக்குகள் பதிவாகின.

குஜராத்தில் டிச. 1, 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. முதல்கட்டமாக சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் உள்ள 89தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

பாஜக, காங்கிரஸ் சார்பில் 89 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆம் ஆத்மி 88, பகுஜன் சமாஜ் 57, ஏஐஎம்ஐஎம் 6 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. ஒட்டுமொத்தமாக 70 பெண்கள் உள்ளிட்ட 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

முதல்கட்டத் தேர்தலில் 2.39 கோடி பேர் வாக்களிப்பதற்காக, 25,430 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

வான்ஸ்டா தொகுதியில் பாஜக வேட்பாளராக பியூஷ் படேல் போட்டியிடுகிறார். இவர் நேற்று பல்வேறு வாக்குச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஜாரி கிராமத்தில் காரில் சென்றபோது சுமார் 40 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, அவர் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் பலத்தகாயமடைந்த அவரை பாஜகதொண்டர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரது ஆதரவாளர்கள் கூறும்போது, “காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் படேலின் தூண்டுதலால் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது” என்றனர்.

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, ஜாம்நகர் வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர்ராஜ்கோட்டிலும், ரவீந்திர ஜடேஜா ஜாம்நகரிலும் வாக்களித்தனர். மத்திய பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், நவ்சாரியில் வாக்களித்தார்.

ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுகான் காத்வி போட்டியிடும் கேம்பாலியா தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் வாக்குப்பதிவு 14 சதவீதம் குறைந்திருக்கிறது. அங்கு சுமார் 54 சதவீத வாக்குகளே பதிவாகின. தெற்கு குஜராத்தில் 64 சதவீதமும், தொங்கு பாலம் விபத்து நேரிட்ட மோர்பியில் 53.75 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

நேற்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, “முதல்கட்டத் தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. முழுமையான புள்ளிவிவரங்கள் கிடைத்த பிறகு, வாக்கு சதவீதம் சற்று அதிகரிக்கலாம்” என்று தெரிவித்தன.

வரும் 5-ம் தேதி 2-ம் கட்டமாக 93 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பிரதமர் 50 கி.மீ. ஊர்வலம்

பிரதமர் மோடி தனது சொந்தமாநிலமான குஜராத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று அகமதாபாத் பகுதியில் உள்ள 16 தொகுதிகளில் 50 கி.மீ. தொலைவுக்கு வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று, வாக்கு சேகரித்தார்.

நரோடா அணைப் பகுதியில் பிரதமரின் வாகன ஊர்வலம் தொடங்கியது. சுமார் 3 மணி நேரம்வாகனத்தில் நின்றபடி வாக்குசேகரித்த பிரதமர் மோடி, காந்திநகர் தெற்கு தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

முன்னதாக, பஞ்ச்மகால் மாவட்டம் கலோல் நகரத்தில் நடைபெற்றபிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடிபேசும்போது, “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே என்னை கடுமையாக விமர்சித்துள்ளார். என்னை ராவணன் என்று அழைக்கும்படி அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதனால் அவர் என்னை 100 தலை ராவணன் என்று வசை பாடியுள்ளார்.

மோடியை யார் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சிப்பது என்பதில் காங்கிரஸ் தலைவர்களிடையே பெரிய போட்டியே நிலவுகிறது. குஜராத் மாநிலம், ராம பக்தர்களின் பூமி. இந்த மக்கள் காங்கிரஸுக்கு தகுந்தபாடம் கற்பிப்பார்கள். என் மீது எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு தாமரைகள் மலர்ந்து கொண்டே இருக்கும்” என்றார்.

அகமதாபாத் பகுதியில் நேற்று வாகனப் பிரச்சாரத்தில் பிரதமர் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் செல்ல பாதுகாப்பு படையினர் வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE