புதுடெல்லி: ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பது பெருமை அளிக்கிறது. அதன் மூலம் உலக நன்மைக்கு வழிகாட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வானொலியில் நேற்று ஒலிபரப்பான 95-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது. வரும் டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்கிறது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது. ஜி-20 தலைமை இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பையும் வழங்கியுள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலக நன்மை, ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இந்தியா வழிகாட்டும்.
உலகம் ஒரே குடும்பம் என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஜி-20 தலைமைக்காக 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளைத் தேர்வு செய்துள்ளோம்.
உலக மக்கள் அனைவரும் வளமாக வாழ வேண்டும். உலகம் முழுவதும் அமைதி நிலைத்திருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். ஜி-20 தலைமையின் போது இந்த லட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம். உலகம் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இந்தியாவால் தீர்வுகாண முடியும்.
» FIFA WC 2022 | ஸ்பெயின் - ஜெர்மனி இடையிலான போட்டி 1-1 என டிரா
» பிஹார் | டெலிகாம் நிறுவன ஊழியர்கள் போல நடித்து செல்போன் டவரை திருடி சென்ற கொள்ளையர்கள்
தலைநகர் டெல்லி மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜி-20 அமைப்பின் மாநாடு மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அப்போது, பல்வேறு நாடுகளில் இருந்துவரும் மக்களை நீங்கள் சந்திக்க நேரிடும். அவர்களுக்கு உங்கள் பகுதியின் கலாச்சாரம், தனித்துவங்களை எடுத்துரைக்க வேண்டுகிறேன்.
இந்த நேரத்தில் இளைஞர்களுக்கு ஓர் அழைப்பை விடுக்கிறேன். ஜி-20 மாநாடு, நிகழ்ச்சியோடு ஏதாவது ஒரு வகையில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஜி-20 தொடர்புடைய விவாதங்கள், போட்டிகள் நடத்தலாம். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகங்கள் இதுபோன்ற போட்டிகளை நடத்த வேண்டும்.
கடந்த 18-ம் தேதி இந்திய விண்வெளித் துறையில் புதிய வரலாறு படைக்கப்பட்டது. அன்று இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய இந்த ராக்கெட், பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது. எடை குறைவானது மட்டுமின்றி, பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது தயாரிப்புச் செலவும் மிகக் குறைவாகும். விண்வெளியை தனியார் துறைக்கு திறந்துவிட்ட பிறகு, இளைஞர்களின் கனவுகள் மெய்ப்படத் தொடங்கியுள்ளன.
இந்தியாவும் - பூடானும் இணைந்து தயாரித்த செயற்கைக்கோள் கடந்த 26-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. ட்ரோன் தொழில்நுட்பத்திலும் இந்தியா அதிவேகமாக முன்னேறி வருகிறது. இமாச்சல பிரதேசத்தின் கின்னோரில், ட்ரோன்கள் வாயிலாக ஆப்பிள்கள் கொண்டு செல்லப்பட்டன. மலைப் பிரதேசமான கின்னோரில் இருந்து ஆப்பிள்களை இனி பிற பகுதிகளுக்கு எளிதில் கொண்டு செல்லலாம்.
கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் இசைக்கருவிகளின் ஏற்றுமதி மூன்றரை மடங்கு அதிகரித்திருக்கிறது. இதேபோல, மின்னிசைக் கருவிகள் ஏற்றுமதி 60 மடங்கு அதிகரித்திருக்கிறது. உலகம் முழுவதும் இந்திய கலாச்சாரம், சங்கீதம் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது.
நாகாலாந்தில் நாகா மக்களின் வாழ்க்கை முறை, கலை, கலாச்சாரம், இசையைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க லிடி-க்ரோ-யூ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு நாகா மக்களின் இசை தொகுப்புகளை வெளியிட்டு வருவதுடன், நாகாலாந்தின் இசை, நடனம், பாரம்பரிய பாணியில் ஆடைகளை நெய்வது, தைப்பது,மூங்கில் பொருட்களை உருவாக்குவது குறித்து இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. இதற்காக லிடி-க்ரோ-யூ அமைப்பினரைப் பாராட்டுகிறேன்.
சமூக நூலகம்
உத்தர பிரதேசத்தின் ஹர்தோயி அருகேயுள்ள பான்ஸா கிராமத்தைச் சேர்ந்த ஜதின் லலித் சிங், அங்கு சமூக நூலகம் நடத்தி வருகிறார். இதில் இந்தி, ஆங்கில இலக்கியங்கள், கணினி, சட்டம், போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் என 3,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. சிறுவர்களுக்கான காமிக்ஸ் புத்தகங்களும் உள்ளன. சுமார் 40 தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, ஜார்க்கண்டை சேர்ந்த சஞ்ஜய கஷ்யப், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நூலகங்களை நிறுவி, கல்விச் சேவையாற்றி வருகிறார்.குறிப்பாக, பழங்குடியினர் பகுதிகளில் குழந்தைகளுக்கான நூலகங்களை ஏற்படுத்தி உள்ளார். நூலக மனிதர் என்றழைக்கப்படும் அவரையும் வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago