இலவச மின்சாரம் பெறுவதற்கு பதில் மின்சாரத்தை விற்று வருவாய் ஈட்ட முடியும் - குஜராத் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல்

By செய்திப்பிரிவு

காந்திநகர்: அரசிடமிருந்து பொதுமக்கள் மின்சாரத்தை இலவசமாக பெறுவதற்கு பதில் அதிலிருந்து வருவாய் ஈட்ட முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தின் ஆரவள்ளி மாவட்டம் மொடசா நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: குஜராத் மக்கள் மின்சாரத்தை இலவசமாக பெறுவதற்கு பதில் அதிலிருந்து வருவாய் ஈட்ட முடியும். இதற்கான வழி எனக்கு தெரியும்.

மேசனா மாவட்டம் மோதேரா கிராம மக்கள் தங்கள் வீட்டுக் கூரையின் மீது சோலார் பேனல்களை அமைத்து மின்சாரம் தயாரிக்கின்றனர். இதில் தங்கள் தேவை போக மீதமுள்ள மின்சாரத்தை அரசுக்கு விற்று வருவாய் ஈட்டுகிறார்கள். இந்த முறையை மாநிலம் முழுவதும் அமல்படுத்த நான் விரும்புகிறேன்.

காங்கிரஸ் ஆட்சியின்போது விவசாயத்துக்கு குறைவான விலையில் மின்சாரம் வழங்கக் கோரி போராட்டம் நடத்திய ஆரவள்ளி பகுதி விவசாயிகள் மீதுபோலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலர் உயிரிழந்தனர். இப்போது, இப்பகுதி விவசாயிகள் பயன்பாடற்ற தங்கள் நிலத்தின் ஒரு பகுதியில் சோலார் பேனல்களை நிறுவி பயனடைகின்றனர். இதில் தங்கள் தேவை போக மீதமுள்ள மின்சாரத்தை விற்று வருவாய் ஈட்டுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குஜராத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, டெல்லி, பஞ்சாபைத் தொடர்ந்து குஜராத்திலும் குடியிருப்புகளுக்கு மாதத்துக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இதுபோல காங்கிரஸ் கட்சியும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இந்நிலையில், மின்சாரத்தை விற்று மக்கள் வருவாய் ஈட்ட முடியும் என பிரதமர் மோடி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

25 ஆண்டு விதியை நிர்ணயிக்கும்..: முன்னதாக பனஸ்கந்தா மாவட்டம் பாலன்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “இந்தத் தேர்தலானது யார் எம்எல்ஏ-வாகிறார்கள் அல்லது யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பது தொடர்பானது அல்ல. மாறாக மாநிலத்தின் அடுத்த 25 ஆண்டு கால விதியை நிர்ணயிக்கும் தேர்தல். குஜராத்தில் வலிமையான அரசு தொடர உங்கள் ஆதரவு தேவை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE