குறுகிய காலத்தில் ஓய்வுபெறும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமனம் - அரசு மீது உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குறுகிய காலத்தில் ஓய்வுபெறக்கூடிய வகையிலேயே தலைமைத் தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு நியமிப்பதாக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஜோசப் மத்திய அரசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து மத்திய அரசு பேசுவதெல்லாம் வெறும் வாய்வார்த்தைதான். தலைமை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுபவர்கள் குறுகிய காலத்தில் ஓய்வு பெறுவதை கருத்தில் கொண்டே மத்திய அரசு நியமனங்களை மேற்கொள்கிறது.

தலைமை தேர்தல் ஆணையர்களின் அதிகாரத்தை வரையறுக்கும் தேர்தல் ஆணைய சட்டம் 1991ன் பிரிவு 4ல் அவர்களின் பதவிக்காலம் அதிகபட்சம் 6 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை அவர்கள் தேர்தல் ஆணையர்களாக நீடிக்கலாம் என சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தின் 2வது அம்சத்தைக் கருத்தில் கொண்டே தலைமை தேர்தல் ஆணையர்களை அரசு நியமிக்கிறது. 1950களில் தலைமை தேர்தல் ஆணையர்கள் 8 ஆண்டு காலம் அந்த பொறுப்பில் இருந்துள்ளனர். ஆனால், கடந்த 2004க்குப் பிறகு அவர்கள் சில நூறு நாட்கள் மட்டுமே தலைமை தேர்தல் ஆணையர்களாக இருக்க முடிகிறது. அவர்களுக்கு 65 வயது ஆகிவிட்டதை காரணம் காட்டி அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு விடுகிறது. இதனால், தேர்தல் ஆணையம் பலவீனமாகவே இருக்கிறது.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 8 ஆண்டுகளில் 6 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாக இருந்துள்ளனர். தற்போதைய தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு 2015ல் இருந்து 2022 வரையிலான 7 ஆண்டுகளில் 8 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாகி உள்ளனர். தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட இருப்பவர்களின் பிறந்த தேதி அரசிடம் இருப்பதால், அதை அரசு பயன்படுத்திக்கொள்கிறது. இது மிக மிக மிக மோசமான நடவடிக்கை. 1990 முதல் 1996 வரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்து தேர்தல் ஆணையத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட டி.என். சேஷன் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்திற்குத் தேவை. பலவீனமான தேர்தல் ஆணையர்களின் தோல்களில் அதிகப்படியான அதிகாரச் சுமை உள்ளது. எனவே, இந்த பொறுப்புக்கு மிகச் சரியான நபர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் விரும்புகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி முன்வைத்த வாதம்: திறமையானவர் என்பதைவிட நல்ல வலுவான குணங்களைக் கொண்ட ஒருவரை தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்க நாங்கள் விரும்புகிறோம். அந்த அடிப்படையிலேயே தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுகிறார். சிறந்த மனிதர் நியமிக்கப்படுவதை அரசு எதிர்க்கவில்லை. ஆனால் அதனை அரசால் எவ்வாறு நிகழ்த்த முடியும் என்பதுதான் கேள்வி. தலைமை தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசன வெற்றிடம் என்று ஏதும் இல்லை. மத்திய அமைச்சரவைக் குழுவின் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையரை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். இவ்வாறு அவர் வாதிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE