2019-ம் ஆண்டில் இந்தியாவில் 5 வகை பாக்டீரியாவால் 6.8 லட்சம் பேர் உயிரிழப்பு - லான்செட் ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் 2019-ம் ஆண்டில் 5 வகை பாக்டீரியாவால் 6.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக லான்செட் ஆய்வு கூறுகிறது.

தி லான்செட் என்ற மருத்துவ இதழில் ஒரு ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. அதில்கூறியிருப்பதாவது: கடந்த 2019-ம் ஆண்டில் சர்வதேச அளவில் இஸ்கெமிக் இதய நோய்க்கு அடுத்தபடியாக மனித உயிரிழப்புக்கு பாக்டீரியா தொற்று 2-வது முக்கிய காரணமாக இருந்துள்ளது. உலகம் முழுவதும் அந்த ஆண்டில் 33 வகை பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கு 5 பாக்டீரியாக்கள் மட்டுமே காரணமாக இருந்துள்ளன. அதேநேரம் உயிர்க்கொல்லி பாக்டீரியாக்கள் மற்றும் தொற்று வகைகள் இடம் மற்றும் வயதுக் கேற்ப மாறுபட்டுள்ளன.

இந்தியாவைப் பொருத்தவரை 2019-ல் இ-கோலி, எஸ்.நுமோ னியா, கே.நிம்மோனியா, எஸ்.அவ்ரூஸ் மற்றும் ஏ.பவ்மானி ஆகிய 5 கொடிய பாக்டீரியாவால் 6 லட்சத்து 78 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக இ-கோலி பாக்டீரியாவால் மட்டும் 1.57 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

எனவே, பாக்டீரியா தொற்று மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த சுகாதார கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியதுஅவசியமாகிறது. குறிப்பாக,நோய்களைக் கண்டறியும் ஆய்வகங்களை அதிகப்படுத்துவது, தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை அமல்படுத்துவது, நோய் எதிர்ப்பு மருந்து பயன்பாட்டை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE