மங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஷரீக்கிற்கு வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மங்களூருவில் கடந்த சனிக்கிழமை அன்று சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது. இதில், ஆட்டோ ஓட்டுநரும், அதில் பயணித்த பயணி ஒருவரும் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அங்கு இருந்த குக்கர், பேட்டரிகள், சர்க்யூட் வயர்கள் உள்ளிட்டவை இருந்ததைக் கண்டு அவற்றை கைப்பற்றினர். இதை அடுத்து இது தீவிரவாத செயலாக இருக்குமோ என்று போலீசார் சந்தேகித்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆட்டோவில் பயணித்த நபரின் பெயர் கர்நாடகாவின் ஷிவ்மோகா நகரைச் சேர்ந்த முகம்மது ஷரீக் என்பதும், இவர் மீது ஏற்கெனவே மூன்று வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. கடந்த 2020-ல் மங்களூருவில் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று, சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் பதியப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட்டில் ஷிவ்மோகாவில் மற்றொரு வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, மைசூரில் லோகநாயக் நகரில் முகம்மது ஷரீக் வசித்து வந்த வாடகை வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், அங்கு 150 தீப்பெட்டிகள், பாஸ்பரஸ், சல்பர், பேட்டரிகள், சர்க்யூட் வயர்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. வெடிகுண்டுகள் தயாரிப்பதற்காக ஷரீக் இவற்றை வாங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
» 2-வது வேலைவாய்ப்பு விழா: 71,000 பேருக்கு நாளை பணி ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி
» ஆதிவாசிகள் முன்னேறுவதை பாஜக விரும்பவில்லை: குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் சாடல்
இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு குறித்து கர்நாடகாவின் கூடுதல் காவல் துறை இயக்குநர் அலோக் குமார் மங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியது: “காவல் துறையின் கண்காணிப்பில் இருந்து வந்த முகம்மது ஷரீக், கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் தலைமறைவாகி உள்ளார். தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்குச் சென்றுவிட்டு கடந்த செப்டம்பர் 20ம் தேதி அவர் மைசூரு வந்துள்ளார்.
ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததும் அது முகம்மது ஷரீக்கின் வேலையாகத்தான் இருக்கும் என எண்ணினோம். எனினும், அவருடைய பழைய புகைப்படத்தில் உள்ள முகத்திற்கும், தற்போதைய முகத்திற்கும் வித்தியாசம் இருந்தது. எனவே, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களை வரவழைத்து விசாரணை நடத்தினோம். அதன்மூலம், முகம்மது ஷரீக்தான் என்பதை உறுதி செய்தோம்.
அவர் மீது சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டம், ஆவண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். இவர், மைசூரில் இருந்து பேருந்து மூலம் மங்களூருக்கு வந்துள்ளார். கடந்த 10ம் தேதி மங்களூரு வந்த இவர், வெடிகுண்டு வைப்பதற்கான இடங்களை தேர்வு செய்துள்ளார். இவர் வெடிகுண்டுகளை தயாரித்தாலும் அதிக சேதத்தை விளைவிக்கக் கூடிய வெடிகுண்டுகளை தயாரிக்கும் அளவுக்கு அவர் தேர்ச்சி பெறவில்லை. அவர் தயாரித்திருந்த வெடிகுண்டுகள் அதிக சேதத்தை விளைவிக்கக் கூடியவையாக இருந்திருந்தால், இந்நேரம் அவர் பல துண்டுகளாக சிதறி இருப்பார். அவர் பல இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
முகம்மது ஷரீக் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து அவர்கள் மூலம் ஊக்கம் பெற்றுள்ளார். அவருக்கு உதவிய 4 பேரை இதுவரை கைது செய்துள்ளோம். அவர்களில் இருவர் ஷிவ்மோகாவையும், ஒருவர் மங்களூருவையும் மற்றொருவர் தமிழ்நாட்டின் உதகமண்டலத்தையும் சேர்ந்தவர்கள். துபாயில் இருக்கலாம் என சந்தேகப்படும் அராபத் அலி என்பவரோடு முகம்மது ஷரிக்கிற்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்.
மேலும், என்.ஐ.ஏ-வால் தேடப்படும் அப்துல் மதீன் தாஹா என்பவரோடும் முகம்மது ஷரீக்கிற்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. பிட் காயின்ஸ் மூலம் முகம்மது ஷரீக் பண உதவி பெற்று வந்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து அவருக்கு உதவி கிடைத்துள்ளது. எனவே, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று கர்நாடகாவின் கூடுதல் காவல் துறை இயக்குநர் அலோக் குமார் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
1 day ago