குஜராத் தேர்தல் | காங்கிரஸ் 125 இடங்களில் வெல்லும்: அசோக் கெலாட் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

சூரத்: “குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 125 இடங்களில் வெற்றி பெறும்” என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்தத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் தங்களின் பிரச்சாரங்களை ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை தனது பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார்.

இந்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் மாநில முதல்வருமான அசோக் கெலாட், “நடைபெற இருக்கும் குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 125 இடங்களில் வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்த முறை சிறப்பாக செயல்படும். கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் மோசமான நிர்வாகத்தினால் பாஜக அரசுக்கு எதிரான ஒரு மனநிலை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. பாஜக எதிர்ப்பு என்பது கடந்த முறை இருந்ததை விட அதிகமாக உள்ளது. மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

கோவிட் பெருந்தொற்றின்போது நாடுமுழுவதும் பாஜக அரசின் மோசமான நிர்வாகத்தினை பார்த்தது. மேலும், அங்கு மோர்பி பாலம் விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து பொறுப்பில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். விபத்து குறித்து குஜராத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு எடுத்துள்ளது. மக்கள் கள்ளச் சாராயத்தினால் உயிரிழந்துள்ளனர். இந்த முறை ஆளும் அரசின் அரசியல் விளையாட்டு வேலை செய்யப்போவதில்லை. ஆச்சரியமான முடிவுகள் காத்திருக்கின்றன.

உத்தரப் பிரதேச தேர்தலில் வெற்றி பெற்றத்தற்கு பின்னர், மோடியும், அமித் ஷாவும் இங்கு (குஜராத்) வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன அர்த்தம் என்றால், பாஜக இங்கு வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். வாராவாரம் அவர்கள் குஜராத்திற்கு வருவது அவர்கள் இங்கு பலவீனமாக இருப்பதைக் காட்டுகிறது. அதனால், அவர்கள் இருவரும் இங்கேயே முகாமிட்டுள்ளனர்.

நாங்கள் அப்படிச்செய்ய வேண்டிய தேவை இல்லை. ராகுல் காந்தி குஜராத் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு இருக்கிறார். அதில் அவர் எழுப்பும் ஒவ்வொரு பிரச்சினையும் ஒவ்வொரு வீடுகளையும் சென்றடைந்துள்ளது. தற்போது அவர் தனது முழு கவனத்தையும் யாத்திரையில் செலுத்துவதால் அவரால் குஜராத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை. இன்று (திங்கள்கிழமை) அவர் இங்கு வர இருக்கிறார். அப்போது அவர் தனது கருத்தைத் தெரிவிப்பார்.

இமாச்சலப் பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து கேஜ்ரிவால் ஏன் திடீரென பின்வாங்கினார் என யாரவது அவரிடம் கேள்வி கேட்க வேண்டும். ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு அங்கு முட்டுக்கட்டை போட்டிருந்தனர். யாருக்கு தெரியும், அவர்கள் இங்கிருந்தும் வெளியேறலாம். அவர்களின் நம்பகத்தன்மை குறைந்துவிட்டது.

இங்கு ஒரு சமூகத்தை குறிவைத்து அரசியல் நடத்தப்படுகிறது. இது ஒரு துரதிர்ஷ்டமான நிகழ்வு. அதற்கு ஒரு பெயரும் கொடுக்கப்பட்டு பொய் வாக்குறுதிகளும் வழங்கப்படுகின்றன” என்று அசோக் கெலாட் தெரிவித்தார்.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராதில் கடந்த 27 வருடங்களாக பாஜக தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. இதுவரை மாநிலத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் போட்டி நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக அங்கு போட்டியிடுகிறது. இதனால், குஜராத்தில் மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. இதற்காக குஜராத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திங்கள்கிழமை குஜாராத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் ஆகிய மூன்று பேரும் பிரச்சாரம் செய்வது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE