ஆன்மீகத்துடன் மட்டுமே தமிழுக்கு நெருக்கம் அதிகம்: வாரணாசியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, செய்தியாளரின் கேள்விகளுக்கு அவர் பதில்கள் வருமாறு:

மத்திய அரசின் காசி தமிழ்ச் சங்கமம் விழாவில், பிரதமர் மோடியுடன் மேடையில் அமரும் வாய்ப்பு கட்சியின் மாநிலத் தலைவரான உங்களுக்கு கிடைத்தது. அதை எப்படி உணர்ந்தீர்கள்?

நிச்சயமாக எனக்கு இது ஏன் எனத் தெரியாது? இது, கட்சிக்கு கிடைத்த மகிழ்ச்சி என்பதை தாண்டி தமிழக மக்களுக்கு தொடர்ந்து கிடைத்து வரும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கிறேன். யாராக இருந்தாலும் தமிழக மக்களுக்காக, தமிழர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுபவர்களுக்கு ஓர் அங்கீகாரம் அளிக்க பிரதமர் மோடி விரும்புவார். அந்த வகையில் எனக்கு கிடைத்துள்ளது என்பதை தவிர வேறு எதையும் நான் பார்க்கவில்லை.

காசி தமிழ்ச் சங்கமத்தின் தாக்கம் தமிழகத்தில் எப்படி இருக்கும்? இதன் மூலம், பாஜக.வுக்கு அரசியல்ரீதியாக பலன் கிடைக்குமா?

இந்த சங்கமம் நிகழ்ச்சியை நடத்தும் யோசனை பிரதமருக்கு சுமார் 7 மாதங்களுக்கு முன்பே உதித்துள்ளது. ஏனெனில், தமிழகம், வாரணாசி போன்ற நகரங்களின் மிகப் புராதனமான கலாச்சாரத்தை இணைக்க வேண்டும் என்று பிரதமர் தனது மேடை பேச்சிலும் குறிப்பிட்டுள்ளார். நமது புதிய கல்விக் கொள்கையின், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற கொள்கையை மத்திய கல்வித் துறை அமைச்சர் முன்னெடுத்து சென்றார். பிரதமர் மோடி நினைத்திருந்தால் கர்நாடகாவையும் வட கிழக்கையும், ம.பி.யையும் உ.பி.யையும் என எதை வேண்டுமாலும் அவர் இணைத்திருக்கலாம். ஆனால், தமிழகத்தையும் காசியையும் இணைத்தது ஒரு வரலாற்று சிறப்பு. இதை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம்.

தமிழகத்தின் ஆதீனங்கள் ஒரே மேடையில் இணைந்திருந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?

முதல் முறையாக தமிழகத்தின் 9 ஆதீனங்களை காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் ஒன்றாக அமர வைத்து, எந்த துறவி, சந்நியாசிகளுக்கும் கிடைக்காத ஒரு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக நிகழ்ச்சியில் தனி மேடை அமைத்து அமர வைத்ததுடன், தானும் சந்தித்து பேசியுள்ளார் பிரதமர் மோடி. இது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை.

சங்கமம் நிகழ்ச்சியில் பலர் உரையாற்றி உள்ளனர். உங்களை கவர்ந்த உரை பற்றி கருத்து கூற முடியுமா?

இந்தி மொழியின் தாய் மாநிலத்தில், பிரதமர் மோடி இந்தியில் உரையாற்றினார். பிரதமர் உரை தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்த்து நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. உலகத்திலேயே மிகப் பழமையான மொழி தமிழ். அது இன்னும் தீவிர நடைமுறையில் உள்ளது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இந்த அறைகூவல் சாதாரணமானதல்ல. இந்திய அரசியல் வரலாற்றில் இதை ஒரு திருப்பு முனையாக நான் பார்க்கிறேன். உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பேசும்போது கூட, சிவன் திருவாயில் உதித்த மொழிகள் 2 எனவும், அவை தமிழும், சம்ஸ்கிருதமும் என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு அழைப்புவிடுத்தும் தமிழக அரசு பங்கேற்காதது குறித்து...?

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு போட்டியாக, வேறு வகையில் சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதாகவும் அதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசிக்கு 70 வயதுக்கும் மேற்பட்டவர்களை அழைத்து செல்வதாகவும் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இதுபோல், போட்டி போடாமல் சங்கமம் தொடர்ந்து நடைபெற உள்ள நாட்களை எப்படி பயனுள்ளதாக மாற்றுவது என்று தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

இந்நிகழ்ச்சி, ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தெரிகிறதே?

பிரதமரை பொறுத்த வரை தமிழை அவர் ஆன்மீகம், அறம் மற்றும் கலாச்சார மொழியாக பார்க்கிறார். மொழியின் ஆன்மீகம் என்பது அதன் கலாச்சார மையத்தில் இருந்து அறமாகி வருவதாக அவர் நினைக்கிறார். எனவேதான், இந்த சங்கமம், மேற்கூறிய மூன்றின் அடிப்படையில் 30 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த மூன்றும் உள்ளடக்கி இருப்பதால்தான் உலகின் அனைத்து மொழிகளையும் விட பழமையானது தமிழ் மொழி என்று பிரதமர் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

தமிழ் மொழி அதிக நெருக்கமாக இருப்பது ஆன்மீகத்துடனா, திராவிடத்துடனா?

தமிழ் என்பது அடிப்படையிலேயே ஒரு ஆன்மீக மொழி. காரணம், திருப்புகழ், தேவாரம் போன்ற ஆன்மீக இலக்கியங்களை சாரமாக்கியே வளர்ந்து வருகிறது. எனவே, ஆன்மீக இலக்கியங்களை மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்ட தமிழ் மொழி சிறந்தது என்று கூறிவிட முடியாது. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் ராமாயணம், மகாபாரதத்தால்தான் அவற்றுக்கு முழு உயிர் இருப்பதாக தன் ஆசிரியர் கூறியதாக பிரதமர் மோடி மேடையில் நினைவுகூர்ந்தார். அதற்கு உயிர்ப்பான தமிழ் மொழியில் அவர் காவியங்களை எழுதியது காரணம். எனவே, தமிழுக்கு ஆன்மீகத்துடன் மட்டுமே நெருக்கம் உள்ளது.

தமிழக முதல்வர் பங்கேற்காத காசி தமிழ்ச் சங்கமம் பூர்த்தி அடையுமா?

தமிழக முதல்வர் என்பவர், தமிழக மக்களின் பிரதிநிதி. காசியின் சங்கமத்தை எப்போது ஒரு தமிழன் தன்னுடையது என்று எண்ணிவிட்டானோ, அப்போதே அது பூர்த்தியாகி விட்டது.

உங்கள் அரசியல் நடவடிக்கைகள் தடாலடியாகி பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகிறதே?

கட்சி இதுவரை செல்லாத ஒரு பாதையில் செல்ல தொடங்கினால் விமர்சனங்கள் வருவது இயல்பு. பாஜக இதர அனைத்து கட்சிகளையும் மிஞ்சி ஆளக் கூடியது என்ற அச்சம் அனைவருக்கும் தற்போது எழுந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தாலும், பாஜக தன் இலக்கை அடையும்.

புதிதாக கட்சியில் இணைந்து நீங்கள் பாஜக மாநில தலைவராகி இருக்கிறீர்கள். அதனால், வாய்ப்புகளை
இழந்து நிற்கும் கட்சியின் மூத்தவர்களுடன் உங்கள் உறவு எப்படி உள்ளது?

பாஜக.வை பொறுத்தவரை அதன் தொண்டனுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம். கட்சியை வழிநடத்தும் தலைவர் என்பது அலங்காரத்துக்கான பதவி கிடையாது. மக்களோடு இருந்து ஒரு முடிவு எடுக்கக் கூடியவர்தான் பாஜக.வில் தலைமை பதவியை அடைகிறார்கள். எனவேதான் எனக்கு கட்சியை வழிநடத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. பந்தயத்தில் திறமையான வீரரால்தான் ஓடி வெல்ல முடியும். பல ஆண்டு காலம் அனுபவம் பெற்றவரை ஓட்டப் பந்தயத்தில் இறக்கும் பழக்கம் பாஜக.வில் கிடையாது. இதற்காக நான் கட்சியின் மூத்தவர்கள் திறன் இல்லாதவர்கள் என்று கூறவில்லை. மூத்த தலைவர்களுடனும் இணைந்து அவர்கள் ஆலோசனையையும் ஏற்றபடி தான் பாஜக செயல்படுகிறது. வயது என்பதையும் தாண்டி திறமையை அடிப்படையாகப் பார்க்க வேண்டும்.

கட்டமைப்பு, தொண்டர்கள் பலத்துடன் சுமார் 60 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் உள்ளது. அவற்றுக்கு மாற்றாக பாஜக.வை கொண்டு வரும் நம்பிக்கை உள்ளதா?

ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுடன் அடுத்தகட்டங்களுக்கு நகர்வது பாஜக.வின் செயலாகி விட்டது. பழைய பஞ்சாங்கத்தை பாடாமல் பாஜக செயலில் இறங்கி திமுக.வை கேள்வி கேட்கிறது. பிரதமரின் 8 ஆண்டு நல்லாட்சியானது, தமிழகத்தின் பட்டி தொட்டிகளையும் சென்றடைந்துள்ளது. வரும் காலம் பாஜக.வுக்கானது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

தமிழ்நாட்டில் அஇஅதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று தெரிவித்திருக்கிறீர்கள். அந்த கட்சி நான்கு பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், யாருடைய தலைமையிலான அதிமுக.வில் பாஜக கூட்டணி சேரும்?

மக்களவை தேர்தல் போட்டியை எங்கள் ஆட்சி மன்றக் குழு தீர்மானிக்கிறது. அவர்கள் எடுக்கும் முடிவில் அதிமுக.வுடன் நாம் மாநிலத்தில் இணைந்து பணியாற்றுகிறோம். இதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை.

கோவை சிலிண்டர் வெடிப்புக்கு பின் ஏற்பட்டுள்ள சூழல், 2024 மக்களவை தேர்தலில் பாஜக.வுக்கு பலன் தருமா?

அந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக வெளிப்படையாக பேசியதன் பலனாக மக்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறோம். திமுக பொய் சொல்கிறது என்பதை நிரூபித்து விட்டோம். குறிப்பாக உள்துறை விவகாரத்தில் தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட தொடங்கி விட்டனர். இதனால் கோவை விவகாரத்தில் கோட்டை விட்டுவிட்டோம் என்று அஞ்சி யோசிக்க தொடங்கி உள்ளது. இனியாவது தமிழக காவல் துறைக்கு உரிய அதிகாரத்தை கொடுக்கலாம் என்று திமுக அரசு யோசிப்பதே பாஜக.வுக்கு கிடைத்த பலன்தான்.

தமிழகத்தின் எந்த எதிர்க்கட்சியும் காட்டாத அளவில் நீங்கள் வன்மத்தை காட்டுவதாகப் புகார் உள்ளதே?

திமுக.வில் தனிப்பட்ட முறையில் அண்ணா மலையை எதிர்ப்பதையே முழு நேர வேலையாக வைத்துள்ளார் கள். அநாகரீகமாகப் பேசி வன்மத்தை கக்குபவர்கள் அவர்கள்தான். அநாகரீகமாக, ஆபாசமாக பேசுவதற்காகவே திமுக அமைச்சர்களும், எம்எல்ஏ.க்களும், திமுக சமூக ஊடக பிரிவும் உள்ளன. ஆனால், நான் தமிழக அரசை தனி மனிதனாக கேள்வி கேட்டு வருகிறேன். என்னை பொறுத்த வரை இந்த புகாரில் உண்மை கிடையாது.

திமுக தலைவர்கள் மூலமாக அவர்களது ஊழல்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்கு கிடைப்பதாகக் கூறியிருக்கிறீர்களே?

எங்களை பொறுத்தவரை திமுக ஆட்சிக்கு வந்த 16 மாதங்களில் பல ஊழல்களை செய்திருக்கிறார்கள். காங்கிரஸுக்கு ஒரு 2-ஜியை போல், திமுக.வுக்கு ஒரு எனர்ஜி நிறுவனமான பிஜிஆர் என்று பட்டியலிட்டு வைத்துள்ளோம். சரியான காலம் வரும் போது இந்த ஊழல் குற்றச்சாட்டால் அவர்கள் அஸ்திவாரம் ஆட்டம் காணும்.

தமிழகப் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது நீங்கள் அதிக உணர்ச்சிவசப்பட்டு கோபம் காட்டுவது போல் இருக்கிறதே?

ஒரு தனி மனிதாக தமிழகத்தில் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் இல்லாத தகுதி எனக்கு உள்ளது. மிகப்பெரிய குடும்ப பின்புலம் இல்லாமல், முதல் தலைமுறை அரசியல்வாதியாக நான் இவ்வளவு தூரம் பயணம் செய்துள்ளேன். இதை கட்சி சார்ந்த சிலர், ஊடகங்களின் போர்வையில் ஒளிந்து கொண்டு என்னை அழித்து விடலாம் என்று எண்ணுகின்றனர்.

அனைத்து ஊடகங்களையும் ஒரே தராசு தட்டில் வைத்துப் பார்க்க மாட்டேன். தமிழகம் சொல்லும் அனைவரும் ஊடகத்தினர் கிடையாது. அறம் சாராமல் ஒரு கட்சிக்கு ஆதரவாக இருப்பவர்களை, நான் தொடர்ந்து எதிர்ப்பேன்.

இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்தார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய உள்துறை இணையமைச்சர் முருகன் ஆகியோருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE