காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

வாரணாசி: காசி தமிழ்ச் சங்கமத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டிற்கும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசிக்கும் இடையே பன்னெடுங்காலமாக இருந்து வரும் ஆன்மிக, கலாசார தொடர்பை கொண்டாடும் நோக்கில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.

இதன்படி தமிழ்நாட்டில் இருந்து 12 குழுக்கள் காசிக்கு செல்ல திட்டமிடப்பட்டு, முதல் குழு கடந்த 16 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இக்குழு காசி சென்றடைந்த நிலையில், அவர்கள் முன்னிலையில் இன்று காசி தமிழ்ச் சங்கமத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், இசைஞானி இளையராஜா, பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய எல். முருகன், காசிக்கும் தமிழகத்திற்கும் இடையே பன்னெடுங்காலமாக உள்ள தொடர்பு குறித்து இலக்கிய ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி நினைவுகூர்ந்தார். இதையடுத்துப் பேசிய இளையராஜா, "காசியில் 2 ஆண்டு காலம் படித்தவர் மகாகவி பாரதியார். அவர்கள் பேசியதைக் கேட்ட பாரதி, காசி நகர் புலவர் பேச்சுக்களை காஞ்சியில் கேட்க கருவி செய்வோம் என கவிதை இயற்றினார்.

இதேபோல், கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர், காசிக்கு வந்து தேசாந்திரியாக பாடிக்கொண்டு சென்றவர். அவர் கங்கையில் மூழ்கி எழுந்தபோது சரஸ்வதி தேவி அவருக்கு வீணையை பரிசாக அளித்திருக்கிறார். அந்த வீணை இன்னமும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பெருமைமிகு காசி மாநகரில் காசி தமிழ்ச் சங்கமத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பிரதமர் மோடிக்கு எப்படி வந்தது என்பதை எண்ணி எண்ணி வியக்கிறேன். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் வெளிநாட்டு மொழியான கெமர் மொழி உள்பட 13 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு, அந்த நூல்கள் வெளியிடப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி நூல்களை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டு நாதஸ்வர கலைஞர்களின் மங்கல இசை இசைக்கப்பட்டது. இதையடுத்து, இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பல்வேறு பக்திப் பாடல்களைக் கொண்ட இந்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, காசி தமிழ்ச்ம் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE