புல்டோசரால் வீடுகளை இடிப்பதற்கு எந்தச் சட்டமும் அனுமதிப்பது இல்லை: கவுகாத்தி ஐகோர்ட் காட்டம்

By செய்திப்பிரிவு

கவுகாத்தி: எவ்வளவு தீவிரமான வழக்குகளின் விசாரணை என்றாலும் தேடுதல் என்ற பெயரில் புல்டோசர்களைக் கொண்டு வீடுகளை இடிப்பதற்கு எந்த குற்றவியல் சட்டமும் பரிந்துரைக்கவில்லை என்று கவுகாத்தி உயர் நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது.

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டடத்தில் காவல் நிலையத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக கவுகாத்தி உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து கொண்டது. அந்த வழக்கு வியாழக்கிழமை தலைமை நீதிபதி ஆர்எம் சாயா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறும்போது, "மிகத் தீவிரமான வழக்குகளை விசாரணை செய்யும்போதும் தேடுதல் என்ற பெயரில் புல்டோசர் கொண்டு வீடுகளை இடிக்க எந்த குற்றவியல் சட்டமும் பரிந்துரைக்கவில்லை.

ஒரு வீட்டில் சோதனை நடத்துவதற்கும் அனுமதி தேவைப்படும். நாளை உங்களுக்கு ஏதாவது தேவை என்றால், என்னுடைய நீதிமன்ற அறையையும் இடித்துவிட்டு தேடுதல் நடத்துவீர்களோ? தேடுதல் என்ற பெயரில் ஒருவருடைய வீட்டை இடிக்க அனுமதி வழங்கினால், யாருக்கும் இங்கே பாதுகாப்பு இருக்காது. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம்.

அந்தத் தேடுதலின்போது ஒரு கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கி அங்கே வைக்கப்பட்டதாகவும் இருக்கலாம். இவ்வாறு வீடுகளை இடிக்கும் சம்பவங்கள் எல்லாம் சினிமாவில் தான் நடக்கும், அப்போதும் ‘வாரன்ட்’ காண்பிக்கப்படும். வீடுகளில் தேடுதல் நடத்துவதற்கு அதனை இடிப்பதை விட நல்ல வழிமுறையை இனி ஆராயலாம். சட்டம் - ஒழுங்கு என்ற இரண்டு வார்த்தைகளை ஒன்றாக சேர்த்துப் பயன்படுத்துவதற்கு ஒரு காரணம் உண்டு. சட்டம் - ஒழுங்கை பராமரிக்க இது வழிமுறை இல்லை” என்று தெரிவித்த நீதிபதி, வழக்கை டிசம்பர் 12 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி சஃபிகுல் இஸ்லாம் என்பவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்தார். இதனால், ஆத்திரம் அடைந்த மக்கள், படத்ராவா காவல் நிலையத்திற்கு கடந்த மே 21-ம் தேதி தீ வைத்து எரித்தனர்.

இதனைத் தொடந்து அடுத்தநாள் மாவட்ட நிர்வாகம் இறந்த சஃபிகுல் இஸ்லாம் உட்பட ஆறு பேரின் வீடுகளில் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் இருப்பதாகக் கூறி தேடுதல் என்ற பெயரில் புல்டோசர் கொண்டு வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது. இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக கவுகாத்தி உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE