சிறையில் மசாஜ் சிகிச்சை | டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு பாஜக கண்டனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: திகார் சிறையில் இருந்துவரும் டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு சிறையில் மசாஜ் சிகிச்சை அளிக்கப்படும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்யும் வீடியோவை பாஜகவைச் சேர்ந்தவர்கள் பலர் சமூக வலைதலங்களில் பகிர்ந்து தங்களது கண்டனங்களை பதிவுசெய்து வருகின்றனர்.

அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் சுகாதார அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின். இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ கடந்த 2017-ல் வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவரை அமலாக்கத் துறை கடந்த மே 30-ம் தேதி கைது செய்தது. அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் சத்தியேந்திர ஜெயினுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பணமோசடி தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் சிறை எண் 7 ன் கண்காணிப்பளர் மீது சத்தியேந்திர ஜெயின் குறித்து டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கடிதம் எழுதி இருந்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் அமைத்த விசாரணை கமிட்டியின் பரிந்துரையின் பேரில் திகார் சிறையின் கண்காணிப்பாளர் அஜித் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில் சனிக்கிழமை வெளியாகியுள்ள ஒரு சிசிடிவி காட்சியில் சிறையில் இருக்கும் அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு கால், முதுகு, தலையில் மசாஜ் செய்யப்படுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ குறித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆம் ஆத்மி மீது குற்றம் சாட்டிவருகின்றன.

பாஜகவைச் சேர்ந்த ஷெஹ்ஷத் ஜெய் ஹிந்த் என்பவர் அமைச்சருக்கு மசாஜ் சிகிச்சை அளிக்கப்படும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, " சிறையில் அளிக்கப்படும் விவிஐபி சிகிச்சை! அரவிந்த் கேஜ்ரிவாலால் இந்த மந்திரியை பாதுகாக்க முடியுமா, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டாமா. இது ஆம் ஆத்மியின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது" என்று இந்தியில் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் செய்தித்தொடர்பாளர் கவுரவ் பாடியா செய்தியாளர்களிடம், "ஆம் ஆத்மி கட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நீங்கள் (ஆம் ஆத்மி) ஊழலையும் விஐபி கலாச்சாரத்தையும் ஒழிக்க கட்சி தொடங்கினீர்கள். இங்கே ஊழல்வாதி அனைத்து வசதிகளையும் பெறுகிறார்" என்றார்.

கடந்த மாதத்தில், அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. அதற்கான சிசிடிவி காட்சி பதிவுகளையும் டெல்லி நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. மேலும் டெல்லியின் சிறைத்துறை அமைச்சராகவும் இருக்கும் சத்தியேந்திர ஜெயின் தனது பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்ககது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE