தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு தண்டனை - டெல்லி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலகம் முழுவதும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியுடன் தெரிவித்தார்.

தீவிரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க வகை செய்யும் 3-வது அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. தீவிரவாதத்துக்கு நிதி இல்லை என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 2 நாள் நடைபெறும் இம்மாநாட்டின் தொடக்க நாளான நேற்றைய நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

மாநாட்டில் அவர் பேசியதாவது: தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.அரசியல், சித்தாந்தம் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாக தீவிரவாதத்திற்கு உதவும் நாடுகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகம் முழுவதும் தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்கும் வரை நாம் ஓய மாட்டோம். தீவிரவாதத்தை ஆதரிக்கும் அத்தகைய நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்துஇந்தியா எப்போதும் வீரத்துடன் போரிட்டு வருகிறது.

போர் இல்லாவிட்டால் அமைதிநிலவும் என்று சர்வதேச அமைப்புகள் நினைக்கக்கூடாது. மறைமுகபோர்களும் ஆபத்தானவை என்பதை நாம் உணரவேண்டும். எந்தநாடாக இருந்தாலும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் எவருக்கும் ஆதரவு அளிக்கக்கூடாது.

ஒரே ஒரு தாக்குதல் என்றாலும் அது தீவிரவாதம்தான். ஒரே ஒரு உயிர்ப்பலி என்றாலும் அது பெரிய இழப்புதான். தீவிரவாதத்தின் நீண்ட கால தாக்கம் என்பது ஏழை மக்கள் மீதே பெருமளவில் பிரதிபலிக்கிறது. உள்ளூர் பொருளாதாரத்தை பாதிக்கிறது.அதேபோல் தீவிரவாதம் எங்குநடந்தாலும் அதன் மீது நடவடிக்கை அவசியமானது.

இந்த உலகம் தீவிரவாதத்தின் கோர முகத்தை உணரும் முன்னரே இந்தியா அதன் தாக்கத்தை வெகுகாலத்திற்கு முன்னரே சந்தித்துவிட்டது. இந்தியாவில் பல்வேறுகாலகட்டங்களில் பல்வேறு பெயர்களில், வகைகளில் தீவிரவாதம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விலைமதிப்பற்ற ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் தீவிரவாதத்துக்கு இழந்துள்ளோம். ஆனாலும், நாம் துணிச்சலுடன் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியுள்ளோம்.

தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்யும் வேரைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும்.

தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை மிகவும் முக்கியமானது. தீவிரவாதம் போன்ற பிரச்சினைகளை நாம் கூட்டாக கையாள வேண்டும். தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் எந்த நாட்டிலும் இடம் பெறக்கூடாது. தீவிரவாதிகளுக்கு அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அமைப்புகளையும், தனி நபர்களையும் தனிமைப்படுத்த வேண்டும்.

சில நாடுகள் தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கின்றன. ஆனால் சில நாடுகள் தீவிரவாதத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. தங்களதுவெளியுறவுக் கொள்கையின் ஒருபகுதியாகவே இதை வைத்துள்ளன. அவற்றுக்கு அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் ஆதரவு தருகின்றன. நிதியுதவியையும் வழங்குகின்றன.

உலகம் முழுவதும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு தண்டனை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அமித் ஷா பேச்சு: மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: தீவிரவாதத்துக்கு நிதியளிப்பது உலக நாடுகளில் பொருளா தாரத்தைப் பலவீனப்படுத்துகிறது. தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் எந்த மதம், தேசியம் அல்லது குழுவுடன் இணைக்கப்படக்கூடாது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். பாகிஸ்தான் மீதான மறைமுகத் தாக்குதலில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த தடுக்கும் நாடுகளும் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE