லிவ்-இன் ரிலேஷன்ஷிப் முறையால்தான் குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: லிவ்-இன் ரிலேஷன்ஷிப் முறையால்தான் குற்றங்கள் அதிகரிக்கிறது என்று மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லி மஹரவுலி பகுதியில் இளம்பெண் ஷிரத்தாவை அவரது காதலன் அஃப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக உடலை வெட்டி நாய்களுக்கு வீசிய கொடூரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஃப்தாபிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஷிரத்தா கொலை வழக்கு, இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஷிரத்தா கொலை குறித்து தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் கவுசல் கிஷோர், “லிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவால் குற்றங்கள் அதிகரிக்கிறது. படித்த பெண்கள் இம்மாதிரியான உறவுகளில் இருக்கக் கூடாது.

பல ஆண்டுகளாக வளர்த்த பெற்றோரை ஒரேடியாக விட்டுவிட்டு, ஏன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவுகளில் பெண்கள் வாழ்கிறார்கள். அப்படி லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில்தான் வாழ்வார்கள் என்றால், அவற்றை முறையாகப் பதிவு செய்ய வேண்டும். இதுபோன்ற உறவுகளுக்கு அனுமதிக்க எந்தப் பெற்றோரும் தயாராக இல்லை. அவ்வாறு இருக்கும்போது முறைப்படி திருமணம் செய்து கொண்டு பெண்கள் வாழ வேண்டும்.

நன்றாகப் படித்து, தங்கள் எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுக்கும் திறன் தங்களிடம் உள்ளது என நினைக்கும் எல்லாப் பெண்களுக்கும் இம்மாதிரியான சம்பவங்கள் நடக்கின்றன. அத்தகைய பெண்கள்தான் இதில் சிக்கிக் கொள்கிறார்கள். பெண்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். படித்த பெண்கள் இதுபோன்ற உறவுகளில் ஈடுபடக்கூடாது” என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE