குழந்தைகள் தின கொண்டாட்டம்: பள்ளிகளில் மாணவர்கள் உறுதிமொழி எடுக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: குழந்தைகள் தினமான இன்று (நவ.14) பள்ளிகளில் மாணவர்கள் சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும் ‘குழந்தைகள் தினமாக’ மத்திய, மாநில அரசுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி அனைத்து பள்ளிகளும் தங்களின் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். இதுதவிர பள்ளிகளில் அனைத்துக் குழந்தைகளும் காலை இறைவணக்க கூட்டத்தில் சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுக்க வேண்டும்.

இதுசார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேசிய விருது பெற்ற ‘குப்பாச்சிகளு’ (Gubbachigalu) எனும் கன்னட சிறார் படம் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE