குஜராத்தில் ஊழலுக்கு தற்போதைய பாஜக அரசுதான் காரணம்: அசோக் கெலாட்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நரேந்திர மோடி விளையாட்டு அரங்கத்தின் பெயர் மாற்றப்படும், 310 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இங்கு ஆளும் பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது:

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கத்தின் பெயர், சர்தார் படேல் விளையாட்டு அரங்கம் என மாற்றப்படும். குஜராத்தில் மாநில மக்களுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசு வேலையில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். தனியாக வசிக்கும் பெண்கள், விதவைகள், மூதாட்டிகள் ஆகியோருக்கு மாதம் ரூ.2,000 மானிய உதவி அளிக்கப்படும்.

மாநிலத்தில் 3,000 ஆங்கில மீடியம் அரசுப் பள்ளிகள் திறக்கப்படும். பெண்களுக்கு முதுநிலை படிப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும். விவசாய கடன்கள் ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும். 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் அளிக்கப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும். ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். குஜராத் மக்களுக்கு ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். கரோனா இழப்பீடு ரூ.4 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் மலிந்து கிடக்கும் ஊழலுக்கு தற்போதைய பாஜக அரசுதான் காரணம் என கூறிய அசோக் கெலாட், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கடந்த 27 ஆண்டுகளாக நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு குற்றம் புரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE