கோப்புப்படம் 
இந்தியா

பிஹார் | ஓடும் சரக்கு ரயிலுக்கு கீழே தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய நபர்

செய்திப்பிரிவு

பாகல்பூர்: இணையவெளியில் ஓடும் ரயிலுக்கு கீழே தண்டவாளத்தில் படுத்து ஒரு நபர் தன் உயிரை காத்துக் கொள்ளும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. இந்த வீடியோ பார்க்கவே மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. என்ன நடந்தது? அந்த நபர் ஏன் அப்படி செய்தார் என்பதை பார்ப்போம்.

இந்த சம்பவம் பிஹார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் நடந்துள்ளது. கஹல்கான் ரயில் நிலையத்தில் அந்த நபர் ஒரு பிளாட்பாரத்தில் இருந்து மற்றொரு பிளாட்பாரத்திற்கு செல்ல தண்டவாளங்களுக்கு இடையே இறங்கி கடக்க முயன்றுள்ளார். அப்போது சரக்கு ரயில் ஒன்று அங்கு நின்றுள்ளது. அவசரம் காரணமாக அந்த ரயில் நின்று கொண்டிருந்த தண்டவாளத்தில் நுழைந்து அதை கடக்க முயன்றுள்ளார்.

அந்த முயற்சியில் அவர் ஈடுபட்ட போது சரக்கு ரயில் ஓட தொடங்கி உள்ளது. உடனடியாக அதை உணர்ந்து தண்டவாளத்தில் தரையோடு தரையாக அழுத்திய படி படுத்து தன் உயிரை அவர் காத்துக் கொண்டுள்ளார். ரயில் கடந்ததும் எதுவும் நடக்காதது போல எழுந்து செல்கிறார்.

இதனை அந்த ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அது இப்போது வைரலாகி உள்ளது.

‘ரயில்வே நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு இது, அந்த நபரை கைது செய்ய வேண்டும் அப்போதுதான் இது போல யாரும் இனி செய்ய மாட்டார்கள்’ என நெட்டிசன்கள் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT