“காட்டுமிராண்டியான திப்பு சுல்தானின் பிறந்த நாளை கொண்டாடுவதா?” - ஒவைசிக்கு பாஜக எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “காட்டுமிராண்டியான திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடுவதா?” என அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசிக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சியினர் கர்நாடகாவின் ஹூப்ளியில், திப்பு சுல்தானின் பிறந்த தினத்தை நேற்று கொண்டாடினர். இதற்கு பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் தேசிய பொறுப்பாளர் அமித் மால்வியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது: “திப்பு பிறந்த தினத்தைக் கொண்டாடுவது முஸ்லிம்கள் உட்பட அனைத்து இந்தியர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் செயல். ஏனெனில், திப்புவின் மரபு கறைபடிந்த ஒன்று.

திப்பு சுல்தான் ஒரு காட்டுமிராண்டி. கர்நாடகாவின் கூர்க் பகுதியில் உள்ள கொடவர்கள், மங்களூரில் உள்ள சிரியன் கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்கள், கொங்கனிகள், மலபார் பகுதியைச் சேர்ந்த நாயர்கள், மாண்டியன் ஐயங்கார்கள் ஆகிய சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரை ஒரு தீபாவளி தினத்தன்று தூக்கிலிட்டவர் திப்பு. அதன் காரணமாகவே, இந்த சமூக மக்கள் திப்புவின் பிறந்த நாளை இன்றுவரை கொண்டாடுவதில்லை. எண்ணற்ற கோயில்கள், தேவாலயங்களை இடித்து மக்களை பலவந்தமாக இஸ்லாத்திற்கு மாற்றியவர் அவர். மாற்று மதத்தவர்களை வெட்டி வீழ்த்திய வாள் திப்புவின் வாள்.

திப்பு சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல. ஆங்கிலேயர்களைவிட குறைவான காலனி ஆதிக்கம் செலுத்திய பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற்றவர் அவர். திப்பு வெற்றி பெற்றிருந்தால் பாண்டிச்சேரியைப் போல் மைசூர் பிரெஞ்சு காலனியாக மாறியிருக்கும். இந்தியா மீது படையெடுத்து இங்கு இஸ்லாமிய கலிபாவை நிறுவுமாறு ஆப்கானிஸ்தானின் ஜமான் ஷாவுக்கு அழைப்பு விடுத்தவர் அவர். இந்தியா மீது படையெடுக்குமாறு நெப்போலியனுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் குணங்களாக இவை இருக்க முடியுமா?

ஆனால், ஹைதராபாத்தில் இந்துக்களைக் கொன்று குவித்த, இனச் சுத்திகரிப்பு செய்த ரசாக்கர்களை அரசியல் மூதாதையர்களாகக் கொண்டிருக்கும் ஒவைசியிடம் இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மாநில அரசு சார்பில் திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் அதனை ரத்து செய்தது. எனினும், திப்பு ஜெயந்தியை கொண்டாட ஹூப்ளி நகராட்சி அனுமதி அளித்ததை அடுத்து, அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சியினர் திப்பு ஜெயந்தியை நேற்று கொண்டாடினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE