புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த யு.யு.லலித் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து, அவருக்கு அடுத்தபடியாக மூத்த நீதிபதியாக உள்ள தனஞ்செய் யஷ்வந்த் (டி.ஒய்.) சந்திரசூட் 50-வது தலைமை நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, ராஜ்நாத் சிங், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, தலைமை நீதிபதி பதவியிலிருந்து நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற யு.யு.லலித் பங்கேற்றனர்.
தொடர்ந்து, உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு டி.ஒய்.சந்திரசூட் மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "சாதாரண மக்களுக்கு நீதி வழங்குவதில் நான் முன்னுரிமை வழங்குவேன். தொழில்நுட்பம், பதிவகம் (ரிஜிஸ்ட்ரி) மற்றும் நீதித் துறைச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
» மும்பை | கணவர் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் பெண் மரணம்
» அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை பிரதமர் மோடி கண்டுகொள்ளவே இல்லை: கார்கே குற்றச்சாட்டு
பிரதமர் மோடி வாழ்த்து: பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள டி.ஒய்.சந்திரசூட்டுக்கு வாழ்த்துகள். அவரது பணிக்காலம் இனிமையாக அமைய வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
தலைமை நீதிபதி பதவியி லிருந்து ஓய்வுபெற்ற யு.யு.லலித் 74 நாட்கள் மட்டுமே அப்பதவியில் இருந்தார். ஆனால், டி.ஒய்.சந்திரசூட் 2024 நவம்பர் 10-ம் தேதி வரை (2 ஆண்டுகள்) இந்தப் பதவியில் இருப்பார்.
முன்னாள் தலைமை நீதிபதியின் மகன் என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது. இவரது தந்தையான ஒய்.வி.சந்திரசூட் 16-வது தலைமை நீதிபதியாகப் (1978 – 1985) பொறுப்பு வகித்தார். நீண்டகாலம் (7 ஆண்டுகள்) தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தவர் என்ற பெருமை பெற்றவர். தலைமை நீதிபதியின் ஓய்வு பெறும் வயது 65 என்பது குறிப்பிடத்தக்கது.
டி.ஒய்.சந்திரசூட் 1959 நவம்பர் 11-ம் தேதி மும்பையில் பிறந்தார். டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளியலில் (ஹானர்ஸ்) இளநிலைப் பட்டம் பெற்ற இவர், டெல்லி பல்கலை.யில் சட்டம் பயின்றார்.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை.யில் முதுநிலை சட்டப் படிப்பு முடித்த இவர், 1998-ல் மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றினார். 2000-ம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013-ல் அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2016 மே 13-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
பின்னர், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் உறுப்பினராக 2021 ஏப்ரல் 24-ம் தேதி நியமிக்கப்பட்டார். கடந்த அக். 17-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இவரை நியமித்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, சந்திரசூட் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இவர் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்றுள்ளார். அயோத்தி நில வழக்கு, ஆதார் எண், சபரிமலை விவகாரம், தன்பாலின உறவாளர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அமர்விலும் இவர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago