இந்தியாவில் பணியாற்ற என்ஆர்ஐ விஞ்ஞானிகள் விருப்பம்: மக்களவையில் அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

வெளிநாடுகளில் உள்ள நமது நாட்டு விஞ்ஞானிகள் பலர் உள்நாட்டில் பணியாற்ற விருப்பம் காட்டுவதாக மக்களவையில் அறிவியல், தொழில்நுட்ப இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

துணைக் கேள்விகளுக்கு பதில ளிக்கும்போது அவர் புதன்கிழமை கூறியதாவது: இந்தியாவில் பணியாற்றத் தயார் என விருப்பம் தெரிவித்து வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானிகள் நிறையபேர் விண்ணப்பித்துள்ளனர். நாட்டின் பணிச்சூழல் மீதான அவர்களது நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஊதியமும் தகுதிக்கு ஏற்ப இருக்கும் என்பதும் அவர்களது மனமாற்றத்துக்கான காரணங்களில் ஒன்று. தாம் புறக்கணிக்கப்படுவதாக கருதி பல விஞ்ஞானிகள் நாட்டை விட்டு வெளியே செல்ல நேரிட்டது. இப்போது பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களிலும் சில கமிட்டிகளிலும் அவர்களை சேர்க்க திட்டமிட்டு அழைக்கிறது மத்திய அரசு.

அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும் திறமை படைத்த வர்களை ஈர்க்கவும் வெகுமதி திட்டங்களை அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. ஆராய்ச்சிப் பரிமாற்றத் திட்டங்களை ஊக்குவிக்க இந்திய-பிரெஞ்சு அறிவியல் மன்றம் அமைத்திடவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

காப்புரிமைகள் தொடர்பான துறைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சி கட்டுரை சார்ந்த பிரசுரங்கள் எண்ணிக்கை 2010ல் 40 ஆயிரத்து 711 ஆக உயர்ந்துள்ளது. இது 2005ல் 26 ஆயிரத்து 93 ஆக இருந்தது.

அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்க ஆராய்ச்சி, மேம் பாட்டில் சிறப்பாக செயல்படும் தொழிற்சாலைகளுக்கு தேசிய விருது, ஆராய்ச்சி மேம்பாட்டுப் பிரிவுகளுக்கு அங்கீகாரம், தனியார் - அரசு கூட்டு முயற்சி யிலான ஆராய்ச்சி மேம் பாட்டுத் திட்டங்களுக்கு ஊக்கம் கொடுப்பது, பல்கலைக்கழ கங்களில் ஆராய்ச்சி, மேம்பாட்டு கட்டமைப்பை வலுப்படுத்துவது ஆகியவை அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிக்க எடுக்கப்படும் சில முயற்சிகள் என்றார் ஜிதேந்திர சிங்.

நவீன வசதிகள், கல்வி, வேலைக்கான வாய்ப்புகளை உள்ளடக்கியதாக ஸ்மார்ட் சிட்டி என அழைக்கப்படும் 100 நவீன நகரங்களை நாடு முழுவதும் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை மக்களவையில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் எம்..வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இது பற்றி அவர் கூறியதாவது: 100 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கும் திட்டம் கொள்கை நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர், மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி இது தொடர்பான விவரங்கள் இறுதி செய்யப்படும். நகர்ப்புறங்களுக்கு மக்கள் குடியேற, அங்குள்ள கல்வி, வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு வசதிகளே முக்கிய காரணங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE