ஆம் ஆத்மிக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக: துணைநிலை ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த உடனடியாக உத்தரவிடுமாறு துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கு பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும், அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான், தங்களுக்கு எழுதிய முதல் கடிதத்தை அடுத்து சிறையில் எனக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் சிறைத் துறை முன்னாள் தலைவர் சந்தீப் கோயல் ஆகியோரின் தூண்டுதலின் பேரில், சிறை நிர்வாகம் எனக்கு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான உண்மைகள் வெளிவராமல் தடுப்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு முன்பாக, அக்கட்சிக்கு எதிராக சிபிஐ உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுகேஷ் சந்திரசேகர் அனுப்பிய முதல் கடிதத்தில், "தென்னிந்தியாவில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியப் பொறுப்பை எனக்கு வழங்க உறுதி அளித்ததை அடுத்து அக்கட்சிக்கு ரூ.50 கோடியை அளித்தேன். இதனை சத்யேந்திர ஜெயின் என்னிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இதையடுத்து, அன்றைய தினமே, டெல்லியில் நான் தங்கி இருந்த நட்சத்திர விடுதிக்கு அரவிந்த் கேஜ்ரிவாலும், சத்யேந்திர ஜெயினும் வந்து என்னை பார்த்தார்கள். கட்சிக்கு ரூ. 500 கோடி நிதி திரட்டி தருமாறு கேஜ்ரிவால் என்னிடம் வலியுறுத்தினார். 20-30 பேரிடம் பேசி, அவர்கள் மூலம் இந்த நிதியை திரட்டி அளிக்குமாறு அவர் என்னை வற்புறுத்தினார்" எனத் தெரிவித்திருந்தார்.

சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும், ஆம் ஆத்மி கட்சி நேர்மையான கட்சி அல்ல என்ற உண்மையை உலகிற்கு உணர்த்த விரும்புவதாகவும், எனவே, அக்கட்சிக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உடனே உத்தரவிடுமாறும் சுகேஷ் சந்திரசேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE