தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கு: தாவூத், சோட்டா ஷகீல் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்

By செய்திப்பிரிவு

மும்பை: தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், அவரது நெருங்கிய கூட்டாளி சோட்டா ஷகீல் உள்ளிட்ட 5 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தாவூத் இப்ராஹிம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.25 லட்சம், அவரது கூட்டாளிகள் சோட்டா ஷகீல் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம், அனீஸ் இப்ராஹிம், ஜாவேத் சிக்னா, டைகர் மேமன் ஆகியோர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.15 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில்தான் தாவூத் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றப் பத்திரிகையை என்ஏஐ தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக மும்பையில் என்ஐஏ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: இந்தியாவில் தீவிரவாத செயல்களிலும், மிரட்டி பணம்பறிப்பு உள்ளிட்ட குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டதாக ‘டி-கம்பெனி’யின் (தாவூத் இப்ராஹிம் கும்பல்) உறுப்பினர்கள் ஆரிஃப் அபுபக்கர் ஷேக், ஷபீர் அபுபக்கர் ஷேக், முகமது சலீம் குரேஷி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மக்களிடம் தீவிரவாத அச்சத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரிஃப் உள்ளிட்டோர் இதை செய்துள்ளனர். மேலும், மும்பை உட்பட நாட்டின் பல பகுதிகளில் தீவிரவாத செயல்களை மேற்கொள்ள வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள தேடப்படும் குற்றவாளி தாவூத், அவரது கூட்டாளி சோட்டா ஷகீலிடம் இருந்து பெரும் தொகையை ஹவாலா முறையில் ஆரிஃப் அபுபக்கர் உள்ளிட்ட 3 பேரும் பெற்றுள்ளனர் என என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் உள்ளிட்ட 5 பேர் மீது இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE