குஜராத் தேர்தல் | “என்னிடம் பாஜக பேரம் பேசியது” - அரவிந்த் கேஜ்ரிவால் பகிரங்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியில் இருந்து ஆம் ஆத்மி விலகிக்கொண்டால் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டெல்லி அமைச்சர்கள் மணிஷ் சிசோதியாவும், சத்யேந்தர் ஜெயினும் விசாரணை வளையத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என பாஜக தன்னிடம் பேரம் பேசியதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார்.

என்.டி.டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர், "பாஜக முதலில் டெல்லியின் துணை முதல்வரான மணிஷ் சிசோதியாவை குறிவைத்தது. ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினால், அவரை முதல்வராக ஆக்குவதாக பாஜக அவருக்கு வாக்குறுதி அளித்தது. எனினும், அவர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து, தற்போது பாஜக என்னிடமே பேரம் பேசியது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து ஆம் ஆத்மி விலகக் கொள்ளுமானால், அமைச்சர்கள் மணிஷ் சிசோதியாவும், சத்யேந்தர் ஜெயினும் மத்திய விசாரணை அமைப்புகளின் விசாரணை வளையத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என பாஜக வாக்குறுதி அளித்தது" என தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இருந்து உங்களை யார் தொடர்பு கொண்டார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அர்விந்த் கேஜ்ரிவால், "எனக்கு மிக நெருக்கமான ஒருவர் மூலம்தான் இந்த தகவலை பாஜக எனக்கு அளித்தது. நான் எப்படி அவரது பெயரை சொல்ல முடியம்? பாஜக எப்போதுமே நேரடியாக பேரம் பேசாது. பலர் மூலமாக சுற்றிவளைத்துத்தான் அது தனது செய்தியை உரியவரிடம் கொண்டு சேர்க்கும். அப்படித்தான் பாஜகவின் செய்தி எனக்கு தெரிவிக்கப்பட்டது" என கூறினார்.

மேலும், "குஜராத் மற்றும் டெல்லி உள்ளாட்சித் தேர்தல் என இரண்டிலும் பாஜக படுதோல்வி அடைய இருக்கிறது. குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சி அமைக்கும். ஏற்கெனவே, குஜராத்தில் நாங்கள் காங்கிரஸ் கட்சியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறோம். பல்வேறு கருத்துக்கணிப்புகள் இதை தெளிவுபடுத்தி இருக்கின்றன. தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. அதற்குள் நாங்கள் முதலிடத்தைப் பிடித்து மாநிலத்தில் ஆட்சி அமைப்போம்" என்றும் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE