புதுடெல்லி: இந்தியாவின் அனைத்து தனிச்சட்டங்களும் போதுமானது என்பதால் பொது சிவில் சட்டம் தேவை இல்லை எனக் குரல்கள் எழத் துவங்கி உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை சட்டத்துறை நிலைக்குழுவுக்கு, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
பொது சிவில் சட்டத்தை அமலாக்கும் முயற்சியாக நாடாளுமன்ற மாநிலங்களவையின் சட்டத்துறைக்கான நிலைக்குழுவால் ‘தனிச்சட்டங்கள் சீர்திருத்தம்’ எனும் பெயரில் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அக்டோபர் 10 -ல் கேட்கப்பட்டதன் அடிப்படையில் தமிழக அரசும் கருத்து கேட்க ஒரு குழுவை அமைத்துள்ளது.
எனினும், இந்த தகவல்கள் ஏனோ வெளியில் பெரிதாக அறியப்படவில்லை. இச்சூழலில், இதுகுறித்த செய்தி கடந்த மாதம் 31-ல் ‘இந்து தமிழ்’ நாளேட்டில் வெளியானது. இதன் தாக்கமாக முஸ்லிம்கள் தரப்பு தமது கருத்துக்களுடன் எதிர்ப்புகளையும் மாநிலங்களவைக்கு அனுப்பி பதிவு செய்யத் துவங்கி உள்ளன.
இந்தவகையில், தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பிலும் ஒரு கடிதம் மாநிலங்களவை நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
» அன்று பகவந்த் மான்... இன்று இசுதான் காத்வி...- ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்களும் சர்ச்சையும்
» இந்தியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் ரிசாட்-2: 13.5 ஆண்டு சேவைக்குப்பின் கடலில் விழுந்தது
மாநிலங்களவை நிலைக்குழு அளித்த காலஅவகாசத்தின் கடைசி நாளான நவம்பர் 1-ல் அனுப்பப்பட்ட கடிதத்தின் சாராம்சம் பின்வருமாறு:
முகலாயர் ஆட்சியில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க இஸ்லாமிய சட்டம் அறிந்த முப்திகள் அமர்த்தப்பட்டிருந்தனர். இதேபோல், இந்துக்களுக்காகவும் ஆலோசனை அளிக்க பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்த நிலை 1700-ம் ஆண்டு வரை ஆங்கிலேயர் ஆட்சியிலும் தொடர்ந்தது.
ஒழுங்குமுறை விதிகள் 2-ன்படி 1772-ல் முஸ்லிம்களுக்கு புனித குர்ஆன், இந்துக்களுக்கு அவர்களது சாஸ்திரங்களின் அடிப்படையில் தனிவிவகாரங்களை விசாரித்து தீர்ப்பளிக்கப்படும் என உத்தரவிடப்பட்டது. இதில் நீதிமன்றங்களுக்கு ஆலோசனை அளிக்க வேண்டி மவுலானா, முப்திமற்றும் பண்டிதர்களையும் ஆங்கிலேயர்கள் அமர்த்தினர். இவற்றில் இந்து, முஸ்லிம்களுக்கான குற்றவியல் சட்டங்கள் 1872-ல் ஐபிசி மற்றும் சிஆர்பிசியின் பிரிவுகள் அமலாக்கப்பட்ட பின் அதன்படி மாறின.
இதில், தனிச்சட்ட விவகாரங்கள் இன்றுவரை இஸ்லாமிய முறைப்படி எந்த பிரச்சினையும் இன்றி தீர்க்கப்பட்டு வருகின்றன. அனைத்து தனிச்சட்டங்களில் முஸ்லிம்களுக்கானது சிறந்த முறையில் தொகுக்கப்பட்ட சட்டமாகும். தமிழகத்தின் திருமணப்பதிவு சட்டம் 2009-ல் அமலான பின்பு அதன்படி அனைவரையும் போல் முஸ்லிம்களும் தமது திருமணங்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவு செய்கின்றனர். ஒரே முறையில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதும் முஸ்லிம்கள் இடையே சட்டவிரோதமாகவே கருதப்படுகிறது.
இதுபோல், திருத்தம் செய்யப்பட்டதில் மீதம் இருப்பது பலதார மணம் மட்டுமே. இந்த பலதார மணம் அதிகம் இருப்பது முஸ்லிம்களிடமா? அல்லது எங்கள் இந்து சகோதரர்களிடமா? என்பது விவாதத்துக்கு உரியது. முஸ்லிம்களது தவிர அனைத்து தனிச்சட்டங்களும் மத்திய அரசால் குறியிடப்பட்டுள்ளன.
இஸ்லாமியர்களுக்கான தனிச்சட்ட சீர்திருத்தத்தில் அதன் மவுலானாக்கள், சட்டம் அறிந்த முப்திகள் மற்றும் முஸ்லிம் அறிஞர்களின் ஆழ்ந்த கருத்துக்களும், ஆலோசனைகளும் அவசியம். அனைவரது தனிச்சட்டங்களிலும் சமூக மாற்றங்களுக்கு ஏற்றபடி ஏற்றத்தாழ்வுகள் களையப்படுவது பாராட்டத்தக்கது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்துக்கள் உள்ளிட்ட இதர வகுப்பினருக்கு அனைத்திலும் இருக்கும் அதே உரிமை முஸ்லிம் குடிமக்களுக்கும் உள்ளது. இந்திய சிவில் சட்டத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகவே முஸ்லிம்களின் தனிச்சட்டமும் உள்ளது. எனவே, ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம்என்ற அர்த்தமற்ற பேச்சுக்கள் கைவிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, முஸ்லிம்களின் தனிச்சட்டத்தில் சீர்திருத்தம் செய்து தொகுக்க இந்த கூட்டமைப்பு தயாராக இருப்பதாகக் தன் கடிதத்தில் கூறியுள்ளது. எனினும், சீர்திருத்தம், தொகுப்பு எனும் பெயரில் நாடு முழுவதிலும் பொது சிவில் சட்டம் கொண்டு வர எதிர்ப்பதாகவும் தன் கருத்தை நிலைக்குழுவிடம் பதிவு செய்துள்ளது. இப்பிரச்சினையில் நேரில் வந்து நிலைக்குழுவின் முன்பு மேலும் விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில், மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான பேராசிரியர் எம்.ஜவாஹிருல்லா, இந்திய தேசிய லீக்கின் தமிழக தலைவர் வழக்கறிஞர் முனிருத்தீன் ஷெரீப் மற்றும் அகில் இந்திய மில்லி கவுன்சிலின் தமிழகப்பிரிவு தலைவரான ஷஹாபுத்தீன் இப்னு சவுத் ஆகியோர் கையெழுத்து இட்டுள்ளனர்.
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில், முக்கிய இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் 19 உறுப்பு அமைப்புகள் உள்ளன. சுமார்10 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டதன் தலைவராக பி.ஏ.காஜா மொகிதீன் பாகவி உள்ளார். இதில்அமைப்புகளாக, தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், இந்திய தவ்ஹித் ஜமாத், ஜமியத்துல் உலாமயே ஹிந்தின் இரு பிரிவுகள், அகில இந்திய மில்லி கவுன்சில் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அரசியல்கட்சிகளில் எம்எம்கே, எஸ்டிபிஐ, வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா, தமிழ்மாநில தேசிய லீக் உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்திய சிவில் சட்டத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகவே முஸ்லிம்களின் தனிச்சட்டமும் உள்ளது. எனவே, ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் என்ற அர்த்தமற்ற பேச்சுக்கள் கைவிடப்பட வேண்டும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
51 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago