மும்முனைப் போட்டிக்குத் தயாராகும் குஜராத் தேர்தல் களம் எப்படி இருக்கிறது? - முதற்கட்ட பார்வை

By பாரதி ஆனந்த்

அகமதாபாத்: டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்படும். தேர்தல் முடிவு டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு கொண்டு வரப்பட்டு குஜராத் ஜனநாயகத் திருவிழாக் கோலம் தரித்துள்ளது. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டி இருப்பதாக கணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தொடர்ச்சியாக 5 முறை ஆட்சியில் இருந்துவிட்ட பாஜக 6-வது முறையாகவும் ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் உள்ளது. கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 99 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாரதிய ட்ரைபல் பார்ட்டி 2 இடங்களிலும் வென்றன. சுயேச்சைகள் 2 இடங்களைக் கைப்பற்றினர்.

கடந்த தேர்தலில் பாஜகவுக்கு க்ளீன் ஸ்வீப் என்று சொல்லும் அளவிற்கு அமையவில்லை. குஜராத் அரசியல் வரலாற்றில் பாஜகவின் கோல்டன் பீரியட் என்றால் அது 2002ல் அக்கட்சி 127 இடங்களைப் பிடித்ததுதான். அதேபோல் காங்கிரஸ் 1985ல் 182 தொகுதிகளில் 149 தொகுதிகளைக் கைப்பற்றியதே அதிகபட்ச வெற்றியாக இருந்தது. அதன்பின்னர் காங்கிரஸ் குஜராத்தில் தேய்ந்து கொண்டே இருந்தது. 2017 ல் தேர்தலில் காங்கிரஸ் சற்றே தன்னை வலுப்படுத்தி மேலே எழுந்தது. ஆனால், அந்த வலிமை நீடிக்கவில்லை காங்கிரஸ் கட்சியின் 14 எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவினர்.

இருப்பினும் காங்கிரஸ் மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை, பட்டிடார் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு, விவசாயிகள் பிரச்சினை, பணமதிப்பிழப்பு ஆகியனவற்றை முன்னிறுத்தி 2017ல் கணிசமான வாக்குகளைப் பெற்றனர். தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, பட்டிதார் சமூகத்தின் அடையாளமாக இருந்த ஹர்திக் படேல், அப்லேஷ் தக்கோர் என்ற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தலைவர் ஆகியோர் 2017ல் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தனர்.

2017 வரை குஜராத் தேர்தல் என்றால் பாஜக, காங்கிரஸ் என்று இருமுனைப் போட்டி மட்டுமே இருந்த நிலையில் தற்போது 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் குஜராத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. குஜராத்தில் புதிய முகம் ஆம் ஆத்மி. ஆனால் ஊழல், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பின்மை ஆகிய பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு பிரச்சாரக் களத்தில் இறங்கியுள்ளது. இலவச மின்சாரம், இலவசக் கல்வி, மாதந்தோறும் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை ஆகிய வாக்குறுதிகளுடன் அடித்தளம் போட்டு வருகிறது.

ஸ்கோர் செய்யுமா ஆம் ஆத்மி? - குஜராத் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் இதுவரை 30 மாவட்டங்களில் ஆம் அத்மி கட்சி மூவர்ணக் கொடி பேரணி மேற்கொண்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்ற பின்னர் கேஜ்ரிவாலும், பகவந்த் மானும் அடிக்கடி குஜராத் வந்து சென்றுள்ளனர். அதேபோல் சவுராஷ்டிரா, சூரத் மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் பல பேரணி, பிரச்சாரங்களை நடத்திவிட்டனர். இந்தப் பகுதியில் தான் 90 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன.

படேல் அனாமத் அண்டோலன் சமிதியின் ஒருங்கிணைப்பாளர் அல்பேஷ் கதாரியா ஆம் ஆத்மியின் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இவர் 2017ல் பட்டிதார் இடஒதுக்கீடு போராட்டத்தில் ஹர்திக் படேலுக்கு உறுதுணையாக இருந்தவராவார். குஜராத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் ஆம் ஆத்மிக்கு உள்ளூரில் நம்பிக்கை தரும் முகமாக இருக்கிறார்கள் இசுடான் காத்வி, கோபால் இடாலியா ஆகியோர் உள்ளனர். இவர்களில் அண்மையில் இடாலையா சர்ச்சையில் சிக்கினார். பிரதமர் மோடியையும், அவரது தாயாரையும் இடாலியா இழிவாகப் பேசிய பழைய வீடியோ ஒன்று வெளியாகி அவரை சர்ச்சைக்குள்ளாக்கியது.

ஆனாலும் அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மியின் பிம்பத்தைக் கட்டமைக்க தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆளும் பாஜக அரசுக்கு அரசு ஊழியர்களின் அதிருப்தி, குறிப்பாக ஆசிரியர்கள், வனத்துறை ஊழியர்களின் எதிர்ப்பு அதிகமாக உள்ளதாக கள நிலவரம் கூறுகின்றது.

மோடி, அமித் ஷாவின் சொந்த ஊர்... - குஜராத் மாநிலம் பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷாவின் சொந்த மாநிலம். இங்கு 6வது முறையாக ஆட்சியைத் தக்கவைப்பது பாஜகவின் பிம்பத்தை சரியாமல் பார்த்துக் கொள்ளும் சவால். ஆகையால் பாஜகவும் ஆட்சியை தக்கவைக்க அயராது முயற்சித்து வருகிறது. கடந்த மார்ச் 11ஆம் தேதி பாஜக அகமதாபாத்தில் பிரம்மாண்ட பேரணி நடத்தியது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா என 4 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த நிலையில் பிரதமர் அந்த மாநிலங்களில் வெற்றிப் பேரணி நடத்தாமல் குஜராத்தில் பேரணி நடத்தினார். அதுவே பாஜகவின் குஜராத் தேர்தலுக்கான முதல் ஆயத்தப் பணி.

அன்று தொடங்கி இதுவரை மாதத்திற்கு இருமுறையாவது பிரதமர் மோடி குஜராத் வருகை தந்துள்ளார். பல்வேறு நலத்திடங்களை மாநிலத்திற்கு அர்ப்பணித்துள்ளார். அமித் ஷாவும் குஜராத்தில் அவ்வப்போது பேரணிகளை நடத்தியுள்ளார். ஆனால் மேடைகளில் காங்கிரஸை விட ஆம் ஆத்மியையே இருவரும் அதிகமாக விமர்சிக்கின்றனர். பாஜக இந்தத் தேர்தலுக்கான முதல்வர் முகம் யாரென்று சொல்லவில்லை. இருந்தாலும் முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இப்போதுள்ள எம்.எல்.ஏ.க்களின் 30% பேருக்கு மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாநில பாஜக அலுவலகம் தெரிவிக்கின்றது.

ராகுலின் வாக்குறுதிகள்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி குஜராத் தேர்தலை ஒட்டி சில வாக்குறுதிகளை அம்மக்களுக்குக் கொடுத்துள்ளார். இலவச மின்சாரம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சத்திற்கு மருத்துவக் காப்பீடு என பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். குஜராத் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அசோக் கெலாட். அண்மையில் மோர்பி நகரில் விபத்து நடந்தபோது கூட அசோக் கெலாட் சம்பத்தன்றே அங்கு வந்து மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். குஜராத் காங்கிரஸுக்கு பலம் சேர்க்க மூத்த தலைவர்கள் பலரும் முயற்சி செய்து கொண்டிருக்க ஹர்திக் படேலின் விலகல் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அதுவும் ஹர்திக் பாஜகவில் இணைந்தது இன்னும் பெரிய அடியாக இறங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியும் இதுவரை முதல்வர் வேட்பாளர் என்று யாரையும் அடையாளம் காட்ட இயலாத சூழலில் இருக்க ஆனந்த் படே அங்கு காங்கிரஸின் முக்கிய முகமாக இருக்கிறார். இவ்வாறாக மும்முனைப் போட்டிக்கு குஜராத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

கருத்துக் கணிப்பு சொல்வது என்ன? - ஆனால், குஜராத், இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என ஏபிபி சி-வோட்டர் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. குஜராத்தில் மொத்தம் உள்ள 182 இடங்களில் பாஜக 135 முதல் 143 இடங்களில் வெற்றி பெறும். எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸுக்கு 36 முதல் 44, ஆம்ஆத்மிக்கு 0 முதல் 2, பிற கட்சிகளுக்கு 3 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு 46.8%, காங்கிரஸுக்கு 32.3%, ஆம் ஆத்மிக்கு 17.4% வாக்குகள் கிடைக்கும். இப்போதைய குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மியின் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளருக்கு 2-ம் இடமும் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு 3-ம் இடமும் கிடைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்