குஜராத் யாருக்கு?- சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று நண்பகல் வெளியாகிறது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று (நவ 3) நண்பகல் 12 மணிக்கு தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது குஜராத் தேர்தல் தேதியும் சேர்த்தே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வாறு வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) மதியம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி வெளியாகும் என்று தலைமைத் தேர்தல் ஆணைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே குஜராத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும்.

முன்பு ஏன் இருமாநில தேர்தல் தேதியும் ஒரே நாளில் அறிவிக்கப்படவில்லை எனக் கேள்விகள் எழுந்தபோது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அதற்கு விளக்கமளித்தார். 2017லும் இதே போல் தான் இருமாநிலங்களுக்கும் தனித்தனியாக தேதிகள் அறிவிக்கப்பட்டன. இமாச்சலப் பிரதேசத்திற்கு தேர்தல் தேதியை முன்னரே அறிவித்ததற்குக் காரணம் அங்குள்ள தட்பவெப்பம் சார்ந்தது. அதனாலேயே அங்கு முன் கூட்டி தேர்தல் அறிவிக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.
இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ல் எண்ணப்படுகிறது.

6வது முறையாக தக்கவைக்குமா பாஜக? குஜராத் தேர்தல் தேதி இன்று வெளியாகும் சூழலில் அம்மாநில அரசியல் களம் இன்னும் சூடுபிடித்துள்ளது. 5 முறை தொடர்ச்சியாக ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் 6வது முறையாக பாஜகவை தக்க வைக்க கடும் பிரயத்தனம் செய்து வருகிறது. அதேவேளையில் குஜராத் தேர்தலில் சரித்திரம் படைப்போம். பஞ்சாப்பை போல் கைப்பற்றுவோம் என்று சூளுரைத்து வருகிறது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலும் அடிக்கடி குஜராத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் குஜராத் 182 தொகுதிகளில் 99 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. இந்நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தை 6வது முறையாக பாஜக தக்கவைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அண்மையில் நடந்த மோர்பி நகர் பால விபத்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE