ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு நான் லஞ்சம் கொடுத்தேன் - சுகேஷ் சந்திரசேகர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

டெல்லி: டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தன்னிடம் இருந்து ரூ.10 கோடி பணத்தை மிரட்டி பறித்ததாக சுகேஷ் சந்திரசேகர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்து வந்தார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தன்னுடன் சிறையில் இருந்த தொழிலதிபருக்கு ஜாமீன் பெற்றுத் தருவதாகக் கூறி தொழிலதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

மோசடி செய்த பணத்தில் இந்தி நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி உள்ளிட்டோருக்கு விலை உயர்ந்த பொருட்களை சுகேஷ் பரிசாகக் கொடுத்ததாக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கிலும் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

இவர் இப்போது டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு எழுதிய கடிதத்தில் ஆம் ஆத்மி கட்சிமீது குற்றம் சுமத்தியுள்ளார். அந்தக் கடிதத்தில், சிறையில் தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு 10 கோடி ரூபாய் வரை கொடுத்ததாக சுகேஷ் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், ஆம் ஆத்மி கட்சியில் தென்னக பிரிவில் முக்கிய பதவி பெறுவதற்கும் ராஜ்ய சபா சீட் பெறுவதற்காகவும் ஆம் ஆத்மிக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்ததாக கூறியுள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுகேஷின் கடிதத்தில், "டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை தனக்கு 2015 ஆம் ஆண்டு முதல் தெரியும். ஜெயின் என்னை பலமுறை சிறையில் சந்தித்துள்ளார். சிறையில் எனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2019ம் ஆண்டு என்னிடம் இருந்து ரூ. 10 கோடியை மிரட்டி பறித்தார். இந்தப் பணத்தை பெறுவதற்காக சிறையில் என்னை கடுமையாக துன்புறுத்தி சித்ரவதை செய்தார்" என்று புகார்களை அடுக்கியிருந்தார்.

ஆனால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக பேட்டியளித்த கெஜ்ரிவால், "இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் கற்பனையானது. மோர்பி சோகம் நேற்றுமுன்தினம் நடந்தது. எல்லா டிவி சேனல்களும் நேற்று இந்தப் பிரச்சினையை எழுப்பின, ஆனால் இன்று அது காணாமல் போய்விட்டது. மாறாக சுகேஷ் சந்திரசேகரின் குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன. இதிலிருந்தே இது மோர்பி விபத்தின் கவனத்தை திசை திருப்புவதற்காகப் புனையப்பட்ட கற்பனைக் கதையாகத் தெரியவில்லையா?.

குஜராத் தேர்தலை முன்னிட்டு பாஜகவினர் பீதியில் உள்ளனர். இத்தனை ஆண்டுகளாக தேர்தல் நேரத்தில் அவர்கள் எதுவும் செய்ய வேண்டிய வந்ததில்லை. பாஜகவும் காங்கிரஸும் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டன. இந்த முறை ஆம் ஆத்மி கட்சி காரணமாக தேர்தலை எதிர்கொள்ள அவர்கள் கடுமையாக போராடுகிறார்கள். அதனால் ஒரு குற்றவாளியை கொண்டு இதுபோன்று கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின். கடந்த 2017-ம் ஆண்டு இவரும், இவரின் குடும்பத்தினரும் ரூ.1.62 கோடி வரை பணமோசடி செய்ததாக மத்திய புலனாய்வுத்துறை வழக்குப்பதிவு செய்தது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE