சிறை கைதிகளின் வாக்குரிமை விவகாரம் - தலைமை தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சிறை கைதிகளின் வாக்குரிமையை பறிக்கும் சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கில் பதில் அளிக்குமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

ஆதித்ய பிரசன்னா பட்டாச்சார்யா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் (1951) 62(5)-வது பிரிவானது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்கள் எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்க முடியாது என கூறுகிறது. இதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.

குறிப்பாக, விசாரணைக் கைதிகள், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது ஜாமீ னில் விடுவிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாமா என்பது குறித்து இந்த சட்டப் பிரிவில் குறிப்பிடப்படவில்லை.

ஒட்டுமொத்தமாக சிறையில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியாது என அந்தப் பிரிவு கூறுகிறது. கைதி மீதான குற்றச் சாட்டின் தன்மை, தண்டனைக் காலம் ஆகியவை கருத்தில் கொள்ளப்படவில்லை. எனவே, இதுகுறித்து மறுஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் ஆதித்ய பிரசன்னா கூறியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், பேலா எம்.திரிவேதி ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்துபதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE