இந்திய ஒற்றுமை யாத்திரை | தெலங்கானா பழங்குடியினருடன் கொம்மு நடனமாடிய ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள பழங்குடி மக்களுடன் இணைந்து அவர்களின் பாரம்பரிய நடனம் ஆடினார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், “பழங்குடி மக்கள் நமது பாரம்பரியம், கலாசாரம் மற்றும் பன்முகத்தன்மையின் களஞ்சியங்கள். கொம்மு கோயா பழங்குடியின நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினேன். அவர்களின் மதிப்பை வெளிப்படுத்துவதாக இருக்கும் அவர்களது கலைகளை நாமும் கற்றுக்கொண்டு அவற்றை பாதுக்காக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

வீடியோவில், கோயா பழங்குடியின கலைஞர்களுடன் கைகோத்துக் கொண்டு டோலக் இசைக்கு ஏற்ப கொம்மு நடனத்தை ஆடுகிறார். அப்போது பழங்குடின மக்களின் பாரம்பரிய தலைப்பாகையை அவர் அணிந்திருந்தார். இதனைத் தொடர்ந்து கலைஞர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தெலங்கானா மாநிலத்தில் 4-வது நாளாக நடைபெறும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் 20 கி.மீ., தூரம் வரை நடப்பார் என்றும், யாத்திரையின் முடிவில் சனிக்கிழமை மாலை ஜட்செர்லா எக்ஸ் சாலை சந்திப்பில் நடைபெற இருக்கும் தெருமுனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேச இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து கிளம்பிய இந்திய ஒற்றுமை யாத்திரை, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் வழியாக தெலங்கானாவில் தற்போது நடைபெற்று வருகிறது. தெலங்கானாவில் 19 சட்டப்பேரவைத் தொகுதிகள், 7 நாடாளுமன்றத் தொகுதிகள் என 375 கிமீ தூரம் வரை நடைபெறுகிறது. தெலங்கானாவை தொடர்ந்து வரும் நவம்பர் 7-ம் தேதி இந்த யாத்திரை மகாராஷ்டிராவிற்குள் நுழைகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE