ரூ.500, ரூ.1000 மதிப்பு நீக்க நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள பண நெருக்கடி காரணமாக பிற மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி சென்ற பல தொழிலாளர்கள் கையில் பணமின்றி திரும்பி வருவதோடு, கடுமையான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மேற்கு வங்க கிராமப்புறங்களிலிருந்து தலைநகர் டெல்லி மற்றும் பிற மாநிலங்களுக்குப் பிழைப்பு தேடிச் சென்ற பல கீழ்நிலை தொழிலாளர்கள் பண நெருக்கடியினால் வேலையில்லாமல் மீண்டும் சொந்த ஊருக்கு கையில் ஒரு பைசாவின்றி திரும்பியுள்ளதால் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று அதிகாலை 3 மணியளவில் டெல்லியில் ஆனந்த்விஹார் ரயில் நிலையத்திலிருந்து மேற்கு வங்க முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஃபராக்கா ரயில் நிலையத்திற்குள் நுழைந்த ரயிலில் பல நூற்றுக் கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் ரயிலிலிருந்து இறங்கி இருளில் கலந்தனர்.
இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களில் அர்ஷத் ஷேக், கவுசர் ஷேக் மற்றும் ராகுல் ஷேக் ஆகிய 3 தொழிலாளர்கள் டெல்லிக்கு சம்பாதிக்கச் சென்று 40 நாட்களில் சொந்த ஊர் திரும்பினர், கையில் காசு எதுவும் இவர்களிடத்தில் இல்லை.
அதாவது டெல்லியில் இவர்கள் 2 மாதங்கள் தொடர்ச்சியாக வேலை செய்தால் ரூ.12,000 சம்பளம் கிடைக்கும். ஆனால் நவம்பர் 8-ம் தேதி ரூபாய் நோட்டு நடவடிக்கைகளினால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடுகளினால் இவர்கள் தங்கள் சம்பளம், வேலை ஆகியவற்றை உதறி தங்கள் சொந்த ஊருக்கு இருக்கின்ற காசை வைத்துக் கொண்டு ரயில் டிக்கெட் மட்டும் எடுத்து திரும்பியுள்ளனர்.
“நாங்கள் பலநாட்கள் பட்டினி கிடக்க நேரிட்டது. எப்படியோ ரயில் டிக்கெட்டுக்கு காசு சேர்த்து கிளம்பினோம். நிலைமை முன்னேற்றம் அடையும் வரை டெல்லிக்குச் செல்ல முடியாது” என்று தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அர்ஷத் ஷெக் என்ற தொழிலாளி தெரிவித்தார்.
டெல்லிக்கு ஆளில்லாமல் சென்ற ரயில்:
ஃபராக்கா தொழிலாளர்களை ரயில் இறக்கி விட்ட சில நிமிடங்களில் டெல்லிக்குச் செல்லும் மால்டா-டெல்லி நியூ ஃபராக்கா எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடைக்கு வந்தது. இந்த ரயிலில் வழக்கமாக டெல்லிக்கு பிழைப்பு தேடிச்செல்லும் தொழிலாளர்கள் நிரம்பி வழிவார்கள். ரயில் கழிப்பறை முதற்கொண்டு ஜன நெரிசல் இருக்கும் ரயில் ஆகும் இது. ஆனால் சனியன்று ரயிலின் அன் - ரிசர்வ்டு பெட்டியில் 20 பேர்களுக்கு மேல் இல்லை.
பெரிய அளவில் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள்:
ஃபராக்கா கிராமம் மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டம் மற்றும் மால்டா மாவட்டங்களிலிருந்து 15 வயது முத்ல் 50 வயது வரையிலான நபர்கள் பிழைப்பு தேடி பல வெளிமாநிலங்களுக்குச் செல்வது வழக்கம்.
மக்கள் முன்னேற்றத்துக்கான பாப்னா அசோசியேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிக் சவுத்ரி என்பவர் கூறும் போது வடக்கு முர்ஷிதாபாத்தின் 5 பிளாக்குகளில் 46% தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் பிழைப்பவர்களே. இப்போது இது 50-60% ஆக அதிகரித்திருக்கும் என்கிறார்.
இப்பகுதியில் ஆண்கள் பிற மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடிச்செல்லும் போது கிராமத்தில் பெண்கள் பீடி சுருட்டும் தொழிலில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும் வறுமைதான் என்கிறார் நிமிதா கிராம பஞ்சாயத்தின் உறுப்பினர் மொகமது சனாவுல்லா.
கேரளாவில் கட்டுமானத் தொழிலுக்காகச் தினசரிக் கூலியாகச் சென்ற பலரும் பிரதமரின் நோட்டு நடவடிக்கை பாதிப்பினால் தற்போது வேலையின்றி, பணமின்றி சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
அவ்வாறு திரும்பி வந்த மொகமது அஃபிகுல் ஷேக் கூறும்போது, “பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் வேலையில்லை. என்னிடம் இருப்பது பழைய நோட்டுகள், எந்த ஒரு கடையிலும் இதனை வாங்க மறுக்கின்றனர். எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு 40 பேர் ஊர் திரும்ப காசில்லாமல் அங்கு வாடிவருகின்றனர்” என்றார்.
ஜோர்புக்குரியா கிராமத்தில் நிலைமை இன்னும் இருள் கவிந்ததாகவே உள்ளது. உத்திரப்பிரதேசத்தில் எடாவாவில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுமானத்தில் பணியாற்றி வரும் 50 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலையின்றி திரும்பி வந்து விட்டனர். மீதமுள்ளவர்களில் வங்கிக் கணக்கு உள்ளவர்களுக்கு மட்டும் தொழிலாளர்களைக் கொண்டு சேர்க்கும் ஒப்பந்ததாரர் பணம் போட்டு வருகிறார். இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வேலையுமின்றி பணமும் இன்றி பலரும் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர், சொந்த ஊரில் மட்டும் என்ன இருக்கிறது? வறுமைதான்!
ஏனெனில் நோட்டு நடவடிக்கையினால் பீடி தொழிலும் கடுமையாக பாதிப்படைந்துள்ளதால் அங்கு இருப்பவர்களுக்கே வேலையின்மை என்ற நிலைதான் உள்ளது .இதனால் பெண் கூலிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
20 பெரிய பீடி தொழிற்சாலைகளில் இப்பகுதியில் சுமார் 12 லட்சம் பீடி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வாராவாரம் கூலி தரும் தொழிலாகும் இது.
முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஹவுரா பீடி தொழிற்சாலையின் உரிமையாளருமான இமானி பிஸ்வாஸ் கூறும்போது, “பணத்தட்டுப்பாடு இப்படியே நீடித்தால் நான் என் தொழிலை மூடிவிட்டுச் செல்ல வேண்டியதுதான்” என்று கூறி இதுவரை மூடப்பட்டுள்ள பீடி தொழிற்சாலைகளையும் குறிப்பிட்டார்.
எனவே ஃபாராக்கா ரயில் நிலையத்தில் ரயில்கள் ஆட்கள் இல்லாமல் காலியாக செல்வது மட்டுமல்ல, வரும் ரயில்களில் கூட்டம் கூட்டமாக தொழிலாளர்கள் வெறும் கையுடன் திரும்பி வருவதோடு, சாக்கு சாக்காக பீடிகள் செல்வதும் குறைந்து விட்டது. பொதுவாக மூட்டை ஒன்றுக்கு 30கிலோ பீடிகள் கொண்ட 150 மூட்டைகள் டெல்லிக்குச் செல்லும் ஆனால் தற்போது 50 சாக்குகள் சென்றாலே பெரிய விஷயமாக உள்ளது.
இவ்வாறாக கிராமப்புறத்திலிருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, சிறுதொழில்களும் மூடப்பட்டு வருவதால் மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago