ஒடிசாவில் கிரகண நேரத்தின்போது பிரியாணி சாப்பிடும் விழா - இந்து அமைப்புகள் புகாரால் 4 வழக்குகள் பதிவு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் எதுவும் சாப்பிடக் கூடாதுஎன சொல்வதுண்டு. மேலும் பல சம்பிரதாயங்களை கிரகண நேரத்தில் இந்துக்கள் கடைப்பிடிப்பது வழக்கம். இவை எல்லாம் மூடப்பழக்கங்கள் என ஒடிசாவில் விழிப்புணர்வு பிரச்சாரம் கிளம்பியது.

தலைநகரான புவனேஸ்வரில் பகுத்தறிவாதிகள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவின் சார்பில் கிரகண நேரத்தில் பிரியாணி சாப்பிடும் சமூகத் திருவிழா நடத்தப்பட்டது. இதில் விழாவுக்கு வந்தவர்களுக்கு கோழி பிரியாணி பரிமாறப்பட்டது. இதற்கு ஒடிசாவில் இந்து அமைப்புகளும், மடத் துறவிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து புரி சங்கராச்சாரியாரான சுவாமி நிஷ்சாலணந்த் சரஸ்வதி கூறும்போது, “கிரகணத்தில் பிரியாணி திருவிழா நடத்துவது சனாதன தர்மத்தின் அடிப்படை கொள்கைகளை அவமதிப்பது ஆகும், விழாவை நடத்தியவர்கள் இதை அறிந்திருக்கவில்லை. இந்தியர்களின் வாழ்கையின் விதிமுறைகளும் கலாச்சாரங்களும் தத்துவம், அறிவியல் மற்றும் சமூக நடப்புகளை மையமாக வைத்து உருவாகிறது. எனவே, இவர்களது உணவை அருந்தியவர்களை கிரகணம் சபித்திருக்கும்” என்றார்.

இதுபோல பிரபல மதகுருவர்பத்ம பாபா பலியாவும், பகுத்தறிவாதிகளின் நடவடிக்கையை கண்டித்தார். இதன் காரணமாக பிரியாணி திருவிழா தொடர்பாக காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதில் இந்து மகா சபை, ஒடிசா பிராமணர் சபை மற்றும் இந்து மடாதிபதி, இந்து துறவி ஒருவரின் புகார்கள் ஏற்கப்பட்டு 4 வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றின் மீது விசாரணையும் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பிரியாணி திருவிழா நடத்தியவர்களில் ஒருவரும் உத்கல் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற தத்துவவியல் பேராசிரியருமான பிரதாப் ரத் கூறும்போது, “இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நான் நடத்திய பிரியாணி திருவிழா தவறானது அல்ல. நான் நம்பும் தத்துவவியலின் அடிப்படையில் வாழ்ந்து வருகிறேன். அறிவியலுக்கு எதிரானவற்றை கடைப்பிடிக்கக் கூடாது. எனது சிறுவயது முதல் நான் கிரகண நேரத்தில் அசைவ உணவுஉண்டு வருகிறேன். எதிர்காலத்திலும் இதை பின்பற்றுவேன்” என்றார்.

இந்நிலையில் பிரியாணி திருவிழா நடத்திய திபேந்தரா சுதர் என்பவருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக அவர் தனது குடியிருப்பு அமைந்துள்ள கட்டக் நகரின் மர்கட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE