அமைச்சர் அமித்ஷா தலைமையில் உள்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசு நேற்று வெளியிட்டஅறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அக்டோபர் 27, 28-ம் தேதிகளில் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பான சிந்தனைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறவுள்ளது. ஹரியாணா மாநிலம் சூரஜ் கண்டில் 2 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் மாநில உள்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

சைபர் கிரைம் நிர்வாகத்துக்கான புற அமைப்பை மேம்படுத்துதல், குற்றவியல் நீதி அமைப்பில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரித்தல், பெண்களின் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பில் உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய ஐந்து உறுதிமொழி மற்றும் ‘‘விஷன் 2047” ஆகியவற்றுக்கான செயல் திட்டத்தை வகுப்பது இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

சிந்தனைக் கூட்டத்தின் இறுதி நாளான அக்டோபர் 28-ல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

அனைத்து மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், யூனியன் பிரதேச நிர்வாகிகள், மாநில உள்துறை செயலர்கள், டிஜிபி.க்கள் மத்திய ஆயுதப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த சிந்தனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE