பள்ளிச் சிறுமி பலாத்காரம்: பெங்களூரில் வலுக்கிறது போராட்டம்

பெங்களூரில் 6 வயது சிறுமி பள்ளி வளாகத்தில் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளியை தண்டிக்கக் கோரியும் மக்கள் சனிக்கிழமை போராட்டம் மேற்கொண்டனர்.

பெங்களூரின் மாரத்தஹள்ளியில் உள்ள 'விப்ஜியார்' என்ற பள்ளியில் படித்து வந்த 6 வயது மாணவி ஒருவர், அதே பள்ளியை சேர்ந்த ஊழியர்களால் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், பெங்களூரு நகரத்தை அதிர்ச்சியடைய செய்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு குற்றவாளிகளை தண்டிக்க கோரி இன்று பலதரப்பட்ட மக்களால் போராட்டம் நடத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்தக் கொடூரச் சம்பவத்தை கண்டித்து பேரணியாக சென்றனர்.

கைகளில் கருப்புப் பட்டையுடன் கருப்பு உடைகளில் வந்த போராட்டக்காரர்கள், பள்ளி வளாகத்திலிருந்து மாரத்தஹள்ளி காவல்நிலையம் வரை அமைதி ஊர்வலம் சென்று, குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி போராட்டம் நடத்தினர். மாரத்தஹள்ளி நகர காவல் ஆணையர் ராகவேந்திர ஆவுராத்கரை சந்திக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்.

இதனை அடுத்து, போராட்டக்காரர்களை சந்தித்த காவல் ஆணையர் ராகவேந்திரா, குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இருப்பினும், அவரது வார்த்தைகளால் சமாதானம் அடையாத போராட்டக்காரர்கள், அலட்சியமாக இருந்த பள்ளி நர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆதாரங்கள் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மேலும், அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்ய வேண்டும்; அவற்றை உரிய காலத்திற்குள் உறுதி செய்து தாக்கல் செய்ய வேண்டும்; பள்ளி நிர்வாகத்தின் கவனக் குறைவால், அந்த பள்ளியை மூடவோ அல்லது பள்ளியின் தேர்வு கவுன்சில் சான்றை ரத்து செய்யவோ கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE