பிரதமர் மோடியின் 'ஸ்கூல் விசிட்' ஆம் ஆத்மியின் மிகப்பெரிய சாதனை: கேஜ்ரிவால்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு நேரில் சென்றதுதான் ஆம் ஆத்மி கட்சியின் மிகப்பெரிய வெற்றி என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களும், எல்லா கட்சிகளும் கல்வி குறித்தும் பள்ளிக்கூடங்கள் குறித்தும் அக்கறை காட்டுகின்றன. இதுதான் ஆம் ஆத்மி கட்சியின் மிகப்பெரிய சாதனை என்று நான் கருதுகிறேன். எல்லா மாநில அரசுகளும் ஒருசேர முயற்சித்தால் ஐந்தே ஆண்டுகளில் பள்ளிகளின் தரம் உயர்ந்துவிடும்" என்று பதிவிட்டுள்ளார். கூடவே அரசுப் பள்ளியில் மாணவர்களுடன் மோடி அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் "பிரதமர் ஐயா, நாங்கள் கல்வித் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்துள்ளோம். 5 ஆண்டுகளில் டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் தரத்தையும் ஐந்தாண்டுகளில் முன்னேற்ற முடியும். இத்துறையில் எங்களுக்கு அனுபவம் அதிகம். எங்கள் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேசத்துக்காக நாம் இணைந்தே பணியாற்றலாம்" என்று கூறியுள்ளார்.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, "பள்ளிகளை மேம்படுத்தி சாதித்துக் காட்டிய அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு குஜராத் மக்களுக்கு இருக்கும்போது பிரதமர் மோடியோ குஜராத்துக்கு வந்து நானும் ஒரு பள்ளிக்கூடம் திறந்திருக்கேன் பாருங்கள் என்று பெருமை பேசியிருக்கிறார். குஜராத்தில் 27 ஆண்டுகள் பாஜக ஆட்சிதான் இருந்தது. அப்போதெல்லாம் அக்கறை இப்போது பாஜகவுக்கு வந்துள்ளது" என்று கிண்டல் செய்தார்.

முன்னதாக நேற்று பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்றார். மிஷன் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் என்ற திட்டத்தை தொடங்கிவைத்த பின்னர் பிரதமர் மோடி அரசுப் பள்ளிக்குச் சென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE