புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களித்த கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, இது நிகழ வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனைக் காலம் தான் காத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (அக். 17) காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வந்த கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, அங்குள்ள வாக்குப்பதிவு மையத்திற்குச் சென்று தனது வாக்கினை செலுத்தினார். அவரோடு, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்குப்பதிவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, இது நிகழ வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனைக் காலம் காத்துக்கொண்டிருந்தேன் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து ப. சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் டெல்லியில் தங்கள் வாக்கினை செலுத்தினர்.
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவிலும், சசி தரூர், கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் ஆகிய இருவரது பெயர்களும் வாக்குச் சீட்டில் இடம் பெற்றுள்ளன. வாக்களிப்பவர்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்களோ அவரது பெயருக்கு அருகே டிக் செய்ய வேண்டும். அதற்கு மாறாக, குறியீடோ அல்லது எண்ணோ இருக்குமானால், அந்த வாக்குச் சீட்டு செல்லாது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இந்த தேர்தல், கட்சியின் மூத்த தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி தலைமையிலான மத்திய தேர்தல் குழு மூலம் நடத்தப்படுகிறது.
24 ஆண்டுகளுக்குப் பின்.. கடந்த 24 ஆண்டுகளாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியுமே காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இருந்துள்ளனர். முதல்முறையாக காந்தி - நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். தற்போது களத்தில் இருக்கும் இருவரில் மல்லிகார்ஜூன கார்கே, காந்தி - நேரு குடும்பத்தின் ஆசி பெற்ற வேட்பாளராகப் பார்க்கப்படுகிறார். எனவே, காந்தி - நேரு குடும்ப விசுவாசிகளாக இருப்பவர்கள் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் காங்கிரஸ் கட்சியில் மாற்றத்தை விரும்புபவர்கள் சசி தரூருக்கும் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், "நான் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு கட்சியினருக்கு இருக்கிறது. கட்சித் தலைவர்களும் அமைப்பும் மாற்று வேட்பாளருக்கு ஆதரவாக இருந்ததால், எங்கள் மீது அதிக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. எனினும், காங்கிரஸ் கட்சிக்கான மறுமலர்ச்சி தொடங்கிவிட்டதாகவே நம்புகிறேன். மல்லிகார்ஜூன கார்கேவிடம் தொலைபேசியில் இன்று பேசினேன். முடிவு எவ்வாறாக இருந்தாலும் நாம் நண்பர்களாக இருப்போம் என்றேன்" எனக் குறிப்பிட்டார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, "இது உள்கட்சித் தேர்தலின் ஒரு பகுதி. நாங்கள் இருவருமே நண்பர்கள்தான். இணைந்து கட்சியை வலுப்படுத்துவோம். தரூர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். நானும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்" என்றார்.
இந்திய அரசியலில் சுமார் 137 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கட்சி காங்கிரஸ். ஆறாவது முறையாக அக்கட்சியின் தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு மையங்களாக நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகங்கள் மாறி உள்ளன. அதோடு, ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருவதால், அவரும் அவரோடு யாத்திரையில் பங்கு பெறுபவர்களும் வாக்களிக்க ஏதுவாக கர்நாடகாவின் பெல்லாரி அருகே உள்ள சங்கனகல்லு என்ற இடத்தில் நகரும் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் 65 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசிய தலைவர் யார் என்பது வரும் புதன் கிழமை தெரிந்துவிடும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
32 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago