புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் இன்னும் முடிவடையாத நிலையில், ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’யை மேற்கொண்டு வரும் நிலையில், வரும் நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலை அக்கட்சியால் திறம்பட எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
குஜராத்திலும் இமாச்சலப் பிரதேசத்திலும் பாஜக ஆளும் கட்சியாக இருந்தாலும், இவ்விரு மாநிலங்களிலும் பிரதான எதிர்க்கட்சியாக இருப்பது காங்கிரஸ். இவ்விரு மாநிலங்களிலும் பாஜகவுக்கு வலிமையான மாற்று காங்கிரஸ். ஆனால், தற்போது வரை இங்கு காங்கிரஸின் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கவேயில்லை.
இம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற 28 நாட்களே உள்ளன. காங்கிரஸ் கட்சியோ தற்போது உள்கட்சித் தேர்தலில் மூழ்கி உள்ளது. அதன் அடுத்த தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயா அல்லது சஷி தரூரா என்பதற்கான தேர்தல் வரும் 170ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்குகள் 19-ம் தேதி எண்ணப்பட இருக்கின்றன. அதன் பிறகுதான் அக்கட்சியின் புதிய தலைவர் யார் என்பது தெரிய வரும். அதன் பிறகே, இமாச்சலப் பிரதேச தேர்தலுக்கான வியூகத்தையும், பிரசார நாட்களையும் இறுதி செய்ய முடியும்.
காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரத் தலைவராகக் கருதப்படும் ராகுல் காந்தி, தனது ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’யை தற்போது தென்மாநிலங்களில் மேற்கொண்டு வருகிறார். தற்போதைய திட்டப்படி ராகுல் காந்தியின் யாத்திரை இமாச்சலப் பிரதேசத்திற்குள் நுழையும்போது தேர்தல் நடந்து முடிந்திருக்கும்.
» குஜராத் பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படாதது ஏன்? - தேர்தல் ஆணையம் விளக்கம்
» இமாச்சலப் பிரதேச பொதுத் தேர்தல்: நவ.12-ல் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு
இத்தகையச் சூழலில் காங்கிரஸ் கட்சி இமாச்சலப் பிரதேசத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி மிகப் பெரியதாக எழுந்து நிற்கிறது. ஆனால், பாஜகவோ களத்தில் படுதீவிரமாக பணியாற்றி வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவின் சொந்த மாநிலம் என்பதால், இமாச்சலப் பிரதேச தேர்தல் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
செப்டம்பர் இறுதியில் இருந்தே பாஜகவின் தேர்தல் பிரசாரம் இமாச்சலப் பிரதேசத்தில் தீவிரமடைந்திருக்கிறது. நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைக்கும் விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா என இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி 10 நாட்கள் செலவிட்டிருக்கிறார்.
இமாச்சலப் பிரதேசத்தின் உனா, சாம்பா, குல்லு, பிலாஸ்பூர் ஆகிய பகுதிகளில் பிரதமரின் பயணம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. கருத்துக் கணிப்புகளும் பாஜகவுக்கே வெற்றி என கூறுகின்றன.
குஜராத் நிலவரம்: இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதியுடனும், குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதியுடனும் முடிவுக்கு வருகின்றன. பதவிக் காலம் முடிவடைவதற்கு அதிகபட்சம் 6 மாத கால அவகாசம் இருக்கும் நிலையில், அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதி. அந்த வகையில், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையும் குஜராத் சட்டப்பேரவையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு ஏற்ப பொருந்தி உள்ளன.
தலைமை தேர்தல் ஆணையர் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்திக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியான உடன், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைகளின் தேர்தல் அட்டவணை இன்று வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இமாச்சலப் பிரதேச தேர்தல் அட்டவணையை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் அட்டவணை பிறகு வெளியிடப்படும் என கூறினார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்படாதது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதில் தேர்தல் ஆணையம் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட்டுள்ளது என அவர் கூறினார். இரண்டு மாநிலங்களுக்கு அடுத்தடுத்து தனித்தனியே தேர்தல் நடத்துவதாக இருந்தால், ஒன்றின் தேர்தல் நடந்து முடிந்து 30 நாட்களுக்குப் பிறகே அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதி என தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையர், ஒன்றின் முடிவு மற்றொன்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே இந்த விதி அமலில் உள்ளதாகக் கூறினார்.
அந்த வகையில், இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக்கலம் முடிவடையும் தேதியில் இருந்து 40 நாட்கள் கழித்தே குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைவதால், இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையும் தனித்தனியே நடத்துவதில் விதிப்படி தவறில்லை என ராஜிவ் குமார் தெரிவித்தார்.
இமாச்சலப் பிரதேசத்திலும் குஜராத்திலும் பாஜகதான் ஆளும் கட்சி. இமாச்சலப் பிரதேசத்தில் ABP நியூஸ் - சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், பாஜக 46.80% வாக்குகளைப் பெறும் என்றும் காங்கிரஸ் 32.30% வாக்குகளைப் பெறும் என்றும் ஆம் ஆத்மி கட்சி 17.40% வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமானால், அது அடுத்து நடைபெறும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். அந்த வகையில், தனித்தனியாக தேர்தல் நடத்தப்படுவது பாஜகவுக்கு சாதகமாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இத்தகைய சூழலில் இமாச்சலப் பிரதேசத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பாஜகவுக்கு கடும் போட்டியை கொடுக்குமா அல்லது அக்கட்சி எளிதாக வெற்றியை நோக்கிச் செல்வதை வேடிக்கை பார்க்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
45 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago