புதுடெல்லி: ஒரு காலகட்டத்தில் தேசிய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. கடந்த 1974-ல் முதன்முறையாக ஜனசங் (தற்போதைய பாஜக) சார்பில் மாநிலங்களவை எம்.பி.யானார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் தலா 3 முறை எம்.பி.யாக இருந்தார். தனது ஜனதா தளம் கட்சியை கலைத்து விட்டு ஆகஸ்ட் 2013-ல் பாஜகவில் இணைந்தார்.
மாநிலங்களவையில் எம்.பி.யாக பாஜக தலைமையிலான அரசு அவரை நியமனம் செய்திருந்தது. தற்போது அந்த பதவிக் காலமும் முடிந்துவிட்ட நிலையில், ‘நான் இப்போது பாஜகவின் சாதாரண உறுப்பினர் மட்டுமே' எனக் கூறும் சுப்பிரமணியன் சுவாமி ’இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி பின்வருமாறு:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாகவும் பிறகு தீவிர அரசியல் எதிரியாகவும் இருந்தவர் நீங்கள். அதிமுக தற்போது பல பிரிவுகளாக பிரிந்திருக்கும் நிலையில் அதுபற்றி கருத்து எதுவும் சொல்வதில்லையே..?
ஜெயலலிதாவுக்குப் பிறகு கட்சியை கையில் எடுத்துக்கொண்ட அதிமுக தலைவர்கள், தாங்கள் எந்த வழக்கிலும் சிக்காமல் இருக்க டெல்லியை ‘காக்கா' பிடித்தனர். அவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்த பின் இவர்களை பாஜக-வும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இப்போது சண்டையிட்டுப் பிரிந்திருக்கும் இவர்கள், மீண்டும் ஒன்றிணைவதில் சசிகலாவுக்கு அதிக ஆர்வம் இருப்பதாகத் தோன்றவில்லை. அப்படி அவருக்கு ஆர்வம் இருந்திருந்தால், நிச்சயமாக எனது நண்பரான சந்திரலேகாவிடம் (முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி) பேசியிருப்பார். இப்போதும்கூட மோசமில்லை. அதிமுகவை ஒன்றிணைக்க உதவி கேட்டு என்னிடம் வந்தால் நிச்சயமாக உதவுவேன்.
» ஹிஜாப் தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு முழு விவரம்
» பிரதமர் பற்றி தரக்குறைவாக பேசிய ஆம் ஆத்மி தலைவரிடம் டெல்லி போலீஸ் விசாரணை
தினமும் காலையில் எழுந்திருக்கும் போதே, இன்று என்ன பிரச்சினையோ என்று நிலைமை இருப்பதாக, அமைச்சர்கள், கட்சியினர் நடவடிக்கை மற்றும் பேச்சு பற்றி முதல்வர் ஸ்டாலின் வருத்தப்பட்டு பேசி இருக்கிறாரே?
அப்படிப்பட்ட பேச்சும் செயலும் பிரச்சினைகளைத்தான் அதிகரிக்கும். இவர்களது கட்சியில் உள்ள ராஜீவ் காந்தி என்பவர் பிராமணர்களுக்கு எதிராக மிக மோசமாக பேசி வந்தார். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என நான் எச்சரித்த பின் அந்த நபர் அமைதியானார். பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் கைதான சமயத்தில், வன்மமான விமர்சனங்கள் வந்தபோதும் எனது எச்சரிக்கைக்கு பிறகுதான் அடங்கினார்கள்.
அரசியலின் ஆழத்தை இன்னும் முழுமையாக அறியாதவர் ஸ்டாலின். அவருக்கு நேரடியான நிர்வாக அனுபவமும் போதாது. இவரைவிட கட்சியில் மூத்தவர்கள் பலர் இருப்பதால் தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டிய சூழலும் உள்ளது. எந்த விஷயத்திலும் இவர்கள் மத்திய அரசோடு இணைந்து செயல்படுவதில்லை. பேச்சும் அதற்கு ஏற்பத்தான் இருக்கிறது. இந்தியா என்ற ஒன்றுபட்ட தேசத்தைப் பற்றி நினைக்காமல், ‘திராவிட நாடு' என்ற கோணத்திலேயே செயல் படும் இவர்கள், இந்தியாவின் ஒரு மாநிலம்தான் தமிழகம் என்ற நிதர்சனத்தை ஒப்புக் கொள்ளவே தயாராக இல்லையே.
திமுகவுக்கு பாஜகவுடன் ரகசிய நட்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பேச்சுக்கள் உலவுகிறதே?
அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஒரு வாய்ப்பு வந்தாலும், திமுகவின் தலைவர்களுக்கு இடையே அதற்கு கடும் எதிர்ப்பு எழும். அவர்கள் ஏதேனும் தவறு செய்தால் நிச்சயம் மத்திய அரசு அதில் தலையிடும். இப்போது வரை மத்திய உளவுத் துறையினர் அந்த அளவுக்கு குறை களை கண்டுபிடித்து அறிக்கை அளிக்கவில்லை.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதே?
ஆ.ராசா மீது உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் 2ஜி ஊழல் மேல்முறையீட்டு வழக்கில், இந்த முறை அவர் தப்ப முடியாது என்பதே என் கணிப்பு. அந்த வழக்கில் குற்றவாளிகளாகப் பதிவு செய்யப்பட்டவர்கள் இந்த முறை நிச்சயமாக தண்டிக்கப்படுவர். இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேலும் தீவிரமாக கவனிக்க வேண்டும்.
செல்வாக்கான கட்சிகளை அரசியல் ரீதியாக அச்சுறுத்த வழக்குகளைப் பயன்படுத்துவது தவறு அல்லவா?
தவறுதான். என்றாலும் நாம் பேசி என்ன ஆகப் போகிறது? இந்த கலாச்சாரம் இந்திரா காந்தி தனது ஆட்சியில் தொடங்கி வைத்தது. அடுத்தடுத்து வந்தவர்களும் அதையேதானே செய்தார்கள்? தக்க எதிர்ப்பு தெரிவித்தால்தான் யாரும் தங்களை மாற்றிக் கொள்ள முடியும்.
பொன்னியின் செல்வன் திரைப் படம் உட்பட இந்து மதம் குறித்து தமிழகத்தில் கிளம்பி உள்ள கடுமை யான விவாதங்கள் எந்தக் கட்சிக்கு அரசியல் ரீதியாக லாபமாக முடியும்?
(வாய்விட்டுச் சிரித்தவர்) ஒரு சினிமாவை வைத்துதான் இந்து தர்மம் பற்றி நாம் முடிவுக்கு வர வேணுமா? தென்னிந்திய நிலப்பகுதியின் மக்கள் அனைவருமே திராவிடர்கள்தான். குறிப்பாக, தமிழகத்திலிருந்து எத்தனை பேர் வாரணாசிக்கு வந்து கங்கையில் ஸ்நானம் முடித்து, பயபக்தியோடு சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றி பூசை செய்கிறார்கள் தெரியுமா? இவர் கள் எல்லாம் இந்துக்களா, இல்லையா என்பதற்கு ஒரு விவாதம் தேவையா? இதுபோன்ற சர்ச்சையால் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது. மதம், தர்மம் என்பது வேறு. இனம் என்பது வேறு. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல.
பல்வேறு அறிஞர்கள் கலந்து கொண்ட ஒரு விவாதத்தில் ஆதி சங்கரரிடம் ‘நீங்கள் யார்?’ என ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் இன்றைய கேரளாவில் பிறந்தவர் என்பதைக் குறிக்கும் வகையில், ’நான் ஒரு திராவிட சிசு’ எனப் பதிலளித்திருந்தார். தமிழகத்தின் சில கட்சியினர்தான், திராவிடம் என்பது தனி சமுதாயம் என்பது போல் கூறி மக்களின் மனப்பான்மையை கெடுக்கப் பார்க்கிறார்கள்.
‘த்ராவிட்' எனும் சொல், புராணம் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது. சம்ஸ்கிருதத்தில் த்ரா என்பதற்கு மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி என்று அர்த்தம். வித் என்றால் அங்கு வசிப்பவர்கள் எனப் பொருள். வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் என மூன்றும் சூழ்ந்த பூமியில் வாழ்ந்த சோழர்கள் உள்ளிட்ட மன்னர்கள் எல்லாமே திராவிடர்கள்தான். அதே சமயம் இந்துக்களும்தான்.
படையெடுப்பு, பணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கிறிஸ்தவர், இஸ்லாமியர் என மதம் மாறியவர்கள் எல்லாம் இப்போது யார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இவர்களது முன்னோர்களும், மதம் மாறும் வரை அவர்களும் இந்துக்களே.
இந்த இந்து சர்ச்சையால் லாபம் பெறுவது பாஜகவா? திமுகவா?
இதில் யாருக்கும் லாபம் கிடைக்காது. இப்போது இருக்கிற நிலைமையில், மற்ற மாநிலங்களில் பேசுவது போல் தமிழகத்திலும் இந்து மத உணர்வுகளின் அடிப்படையில் அரசியல் செய்ய வேண்டுமா, கூடாதா எனக் குழப்பத்தில் உள்ளது பாஜக. ஏனெனில், தமிழகத்தில் உள்ளவர்கள் தாங்கள் இந்துக்கள் என்ற உணர்வோடு இதுவரை வாக்குகளை பதிவு செய்யவில்லை. இவர்களது கோயில் போன்ற பிரச்சினைகளில் கூட நான் தான் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வருகிறேன். அதற்காகவே இந்துக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், ‘இந்து' எனும் அரசியலை வைத்து லாபம் தேட முடியும் என்று திமுக நம்புகிறது. அவர்களுக்கும் அந்த வியூகம் பலன் தராது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக எங்களுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ‘என்னை முதல்வர் வேட்பாளராக்கினால் தமிழகத்தில் பாஜகவை ஆட்சியில் அமர வைப்பேன்’ என்று கூறினீர்கள். தற்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அரசியல் செயல்பாடுகள் எதை நோக்கிச் செல்கிறது?
என்னை முதல்வர் வேட்பாளராக்க கோரிய போது தமிழகத்தில் வேறுவிதமான அரசியல் சூழல் நிலவியது. அண்ணாமலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னைக் கேட்டால் பாஜக தமிழகத்தில் சரியான பலத்தோடு இருக்கா, இல்லையா? என்பதே தெரியவில்லை. இதற்கு அண்ணாமலை மட்டும் காரணம் என்றாக முடியாது. தமிழகத்தில் பாஜக முதல்வர் அத்தனை எளிதாகவந்துவிட முடியாது. முதலில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து நின்று 5 தொகுதிகளில் வென்று காட்டட்டும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago