சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவால் பிரதமராகும் வாய்ப்பை இழந்துள்ளார். இதுபோல அப்பதவியில் அமர விரும்பிய சோனியாவுக்கு முலாயம் தடையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தேசிய அரசியலின் மூத்த தலைவர்களின் கூற்றுகள் சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கின் மறைவில் நினைவு கொள்ளப்படுகிறது. இதன்படி, கடந்த 1996-ல் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்து, அடல் பிஹாரி வாஜ்பாய் முதன்முறையாக பிரதமரானார். பொறுப்பேற்ற 16-வது நாளில் மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் பிரதமர் பதவியை வாஜ்பாய் ராஜினாமா செய்தார்.
இதற்கு அடுத்த நிலையில் அதிக எம்.பி.க்களை வைத்திருந்த காங்கிரஸுக்கு பிற கட்சிகள் ஆதரவளிக்க மறுத்து விட்டன. இதனால், ஐக்கிய முன்னணி எனும் பெயரில் அமைந்த கூட்டணிக்கு காங்கிரஸும் ஆதரவளித்தது. இக்கூட்டணி சார்பில் ஜனதா தளம் கட்சியின் தலைவரான தேவகவுடா பிரதமரானார். இவரது தேர்வுக்கு முன்பாக தொடக்கத்தில் அந்த வாய்ப்புக்கு வி.பி.சிங்கின் பெயரும் இருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலர் ஆதரவளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதன் பிறகு அப்பதவிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் பெயரும் பரிசீலனைக்கு வந்தது. இதற்கு திமுக தடையாக இருப்பதாக எழுந்த பேச்சால் பிரதமருக்கான போட்டியிலிருந்து மூப்பனார் விலகினார்.
இந்தக் கூட்டணியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் இடத்தில் சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவும் முக்கிய அங்கம் வகித்தார். இதனால் மார்க்சிஸ்ட் கட்சியின் டெல்லி அலுவலகத்தில் அதன் தலைவர்களை சந்தித்து முலாயம் சிங் பேசினார். அப்போது அவர், மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை பிரதமராக்கும்படி இடதுசாரிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் முலாயமின் யோசனையை ஜோதிபாசுவின் கட்சித் தலைமை ஏற்கவில்லை. இந்த வாய்ப்பை இழந்ததற்காக இன்றும் இடதுசாரிகள் வருந்துவதாகக் கூறப்படுவது உண்டு.
எனினும், ஜோதிபாசு அப்போது, பிரதமர் பதவியை ஏற்கும்படி முலாயமை அறிவுறுத்தி உள்ளார். இதற்கு காங்கிரஸ் மவுனம் காக்க, பிஹார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது 2 யாதவர்களுக்கும் இடையே தேசிய அரசியலில் போட்டி நிலவி வந்தது. இந்தச் சூழலில் முலாயம் சிங் பிரதமரானால் அவர் தன்னை விட மிஞ்சி விடுவார் என லாலு தடையாக இருந்ததாக தேசிய அரசியலில் பெரும் பேச்சானது.
இதனால் பிரதமரான தேவகவுடாவும் 324 நாட்களுக்கு பிறகு ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. இவரை அடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் பிரதமரானார். குஜ்ராலின் ஆட்சி தேவகவுடாவை விட எட்டு நாட்கள் மட்டுமே கூடுதலாக நீடித்தது.
பிறகு 1998-ல் நடைபெற்ற தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது. இருப்பினும் வாஜ்பாய் தலைமையிலான இந்த ஆட்சி வெறும் 13 மாதங்கள் மட்டுமே நீடித்தது. இவரது அரசுக்கான ஆதரவை அதிமுக வாபஸ் பெற்றதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டது. இதில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது.
இதனிடையே, 1997-ல் காங்கிரஸ் உறுப்பினரான சோனியா காந்தி, 1998-ல் அதன் தேசியத் தலைவரானார். வாஜ்பாய் அரசு கவிழ்ந்ததை அடுத்து அவர், குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு சோனியா தமது கட்சியுடன் சேர்த்து தமக்கு மொத்தம் 272 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதாகவும், மேலும் பல எம்.பி.க்கள் ஆட்சி அமைக்க ஆதரவளிப்பார்கள் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்போது, உத்தரப் பிரதேசத்தில் 20 எம்.பி.க்களை வைத்திருந்த சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கின் திட்டம் வேறாக இருந்துள்ளது. தனக்கு 1996-ல் கிடைத்த பிரதமர் வாய்ப்பை லாலுவுடன் சேர்ந்து காங்கிரஸும் தடுத்ததாக அவர் எண்ணினார். தாமும் ஆதரவளித்தால் சோனியா பிரதமராகி விடுவார் என எண்ணிய முலாயம் அதற்கு தடையாக இருந்துள்ளார்.
அதேசமயம், காங்கிரஸின் மூத்த தலைவர்களான பி.ஏ.சங்மா, சரத்பவார் மற்றும் தாரிக் அன்வர் இணைந்து, ‘சோனியா ஒரு வெளிநாட்டவர்’ என பிரச்சினையை எழுப்பினர். தொடர்ந்து இவர்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறி, தேசியவாத காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினர்.
இதனால் மீண்டும் அக்டோபர், 1999-ல் வந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்து வாஜ்பாய் 3-வது முறையாக பிரதமரானார். இதன் பிறகு 2004-ல் வந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தது. இதில், மனம் மாறிய முலாயம் அக்கூட்டணியில் இணைந்தார். அவருடன் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உறுப்பினராக இருந்தது வரலாறு.
அதேபோல், லாலு மீதான கோபத்தையும் முலாயம் சிங் மறந்தார். பிற்காலங்களில் வந்த தேர்தல்களில் பாஜகவை எதிர்க்க வேண்டி, லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியின் உறுப்பினராக பிஹாரில் போட்டியிட்டார். இதற்கு முன்பாக லாலு குடும்பத்தில் திருமணம் செய்தும் மகிழ்ந்தார் முலாயம் சிங். இவரது பேரனுடன் லாலுவின் மகள்களில் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
இந்தியா
33 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago