உத்தர பிரதேசத்தில் பூர்வீக கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் முலாயம் சிங் உடல் தகனம் - அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல், அவரது பூர்வீக கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதில், கட்சிப் பாகுபாடின்றி அரசியல் தலைவர்களும், ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முலாயம் சிங் யாதவ், ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த 2-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப் பட்டார்.

இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். அவரது உடல் உத்தர பிரதேசத்தில் உள்ள சொந்த ஊரான சைஃபைக்கு நேற்று முன்தினம் மாலை கொண்டு செல்லப்பட்டது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் சைஃபை கிராமத்துக்குச் சென்று, முலாயம் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. ஆளுநர் ஆனந்தி பென் படேல் ஆகியோர் சார்பிலும் அவருக்கு அஞ்சலி செலுத்தியதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், உத்தர பிரதேச அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், முலாயம் சிங்கின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முலாயம் சிங் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று காலை சைஃபை கிராமத்தில் உள்ள மேளா மைதானத்துக்கு கொண்டு செல் லப்பட்டது. இடைவிடாத தூறலுக்கு மத்தியிலும், முலாயம் சிங்குக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக் கானோர் சைஃபை கிராமத்தில் திரண்டனர்.

பின்னர், நேற்று பிற்பகல் அவரது உடல் இறுதிச் சடங்குக்காக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அவரது மகனும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் சிங் யாதவ், சகோதரர் ஷிவ்பால் யாதவ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வாகனத்தில் இருந்தனர். மக்கள் வெள்ளத்துக்கு நடுவில், இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, முழு அரசு மரியாதையுடன், துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

தலைவர்கள் பங்கேற்பு

இறுதிச் சடங்கில் கட்சிப் பாகுபாடின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, மேளா மைதானத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேல் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

உத்தர பிரதேச துணை முதல்வர்கள் சேகவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதக் ஆகியோரும் அஞ்சலி செலுத்தி, அகிலேஷுக்கு ஆறுதல் கூறினர்.

சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சன், தனது மகன் அபிஷேக் பச்சனுடன் இறுதிச் சடங்கில் பங்கேற்றார். திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளரும், நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழு தலைவருமான டி.ஆர்.பாலு, திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE