மதமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விவகாரம்: டெல்லி முன்னாள் அமைச்சருக்கு போலீஸ் சம்மன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மதமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள டெல்லி முன்னாள் சமூகநலத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இதுவரை எனக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை. இன்று மாலையில் போலீசார் என்னிடம் நிகழ்ச்சி குறித்து கேள்வி கேட்டனர். நான் விளக்கம் அளித்திருந்தேன்" என்று ராஜேந்திர பால் கவுதம் திங்கள்கிழமை தெரிவித்திருந்தார். இந்தநிலையில், டெல்லி போலீசார் செவ்வாய்க்கிழமை மதியம் விசாரணைக்கு ஆஜராகும்படி ராஜேந்திர பால் கவுதமுக்கு சம்மன் வழங்கி இருக்கிறது.

முன்னதாக, டெல்லி அரசின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பால் கவுதம். இவர் டெல்லியில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற அசோக விஜயதசமி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர், இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினர். அப்போது அவர்கள் ‘‘இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்களை வழிபட மாட்டேன்’’ என்று உறுதிமொழி ஏற்றனர்.

இந்தநிகழ்ச்சி குறித்த புகைப்படங்களை ராஜேந்திர பால் கவுதம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அமைச்சர் ஒருவர் மதமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதை விமர்சித்திருந்த பாஜக அமைச்சரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ராஜேந்திர பால் கவுதம் ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதுகுறித்து விளக்கம் அளித்திருந்த முன்னாள் அமைச்சர், "என்னை ராஜினாமா செய்யச் சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை. சொந்த விருப்பத்தின்படி ராஜினாமா செய்தேன்.

நான் கலந்துகொண்டது ஒரு சமூக, மதம் சார்ந்த நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி இல்லை. பி.ஆர். அம்பேத்கர் மக்கள் புத்த மதம் தழுவும்போது எடுத்துக்கொள்வதுற்கு 22 உறுதி மொழிகளைக் கொடுத்துள்ளார். கடந்த 1956-ம் ஆண்டு முதல் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் அவை மீண்டும் மீண்டும் ஏற்கப்படுகின்றன. அவை மனிதாபிமானத்திற்கான உறுதி மொழிகள் மட்டுமே. அதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை. நரேந்திர மோடி அரசு கூட அந்த உறுதிமொழிகளை பதிப்பித்து இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் நான் தனிமனிதனாகதான் கலந்து கொண்டேன். ஆம் ஆத்மி அரசின் அமைச்சராக இல்லை. பாஜகவால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை என்பதற்காக இதில் முதல்வரையும் கட்சியையும் ஏன் இழுக்கவேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

டெல்லி, பஞ்சாப்பைத் தொடர்ந்து குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சரின் இந்த செயல் கட்சியையும், அரவிந்த் கேஜ்ரிவாலையும் சிக்கலுக்குள் தள்ளிவிட்டுவிட்டது என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE