கேரளாவின் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் முக்தி அடைந்தது ஆன்மிக சைவ முதலை

By என்.சுவாமிநாதன்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள அனந்தபுரா பகுதியில் அனந்த பத்மநாப சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் தெப்பக்குளத்தில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக பபியா என்ற முதலை வசித்தது. இந்த முதலை அவ்வப்போது கோயிலுக்கு வந்து மூலவரை தரிசித்துச் செல்லும்.

தெப்பக் குளத்துக்கு வரும் பக்தர்களுக்கு பபியா எவ்வித தொந்தரவும் செய்தது கிடையாது. அசைவத்தை முற்றாகத் தவிர்த்து கோயில் பிரசாதம் மட்டுமே உண்டு வாழ்ந்து வந்த இந்த முதலை வயோதிகத்தால் நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று முதலையை குளிர்சாதனப் பெட்டியில் பக்தர்களின் அஞ்சலிக்காக வைத்தனர். கோயில் ஊழியர் சந்திர பிரகாஷ் இந்து தமிழ் திசையிடம் கூறியதாவது: முதலைகள் அசைவ உணவு வகைகளை சாப்பிடும். ஆனால் பபியா அசைவம் சாப்பிடாது. அது தெய்வ அனுக்கிரகம் பெற்ற முதலை. கோயில் தெப்பக்குளத்தில் இருந்த பபியா அங்கிருக்கும் மீன்களைக் கூட சாப்பிட்டது இல்லை. தினமும் 2 வேளை கோயிலில் இருந்தே உணவிட்டு வந்தோம். கடவுளுக்கு நைவேத்தியம் படைத்துவிட்டு காலை, மாலையில் அந்த அரிசி உருண்டையை முதலைக்கு கொடுப்போம்.

கோயிலின் அர்ச்சகர் திருக்குளத்தைப் பார்த்து பபியா என அழைத்தால் குளத்தில் இருந்து கரைக்கு சாப்பிட வரும். கோயில் அர்ச்சகர் முதலையின் வாயிலேயே உணவை வைத்த தருணங்களும் உண்டு. பக்தர்களைப் பொறுத்தவரை பபியாவின் தரிசனத்துக்காக காத்திருப்பார்கள். அதன் தரிசனம் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. யாரும் இல்லாத நேரத்தில் மூலவரை தரிசிக்கவும் பபியா வந்துவிடும். பல நேரங்களில் அப்படி கோயிலுக்குள் வந்திருக்கிறது. அர்ச்சகர் அப்போது செல்போனில் எடுத்த புகைப்படமும் வைரல் ஆனது. சில ஆண்டுகளுக்கு முன்பு பபியா திடீரென காணாமல் போனது. அதனால் அது இறந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் பபியா திரும்பி வந்தது. இப்போதும் பபியாவைக் கடந்த சனிக்கிழமை காணவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு இறந்துகிடந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்பு ஒரு காலத்தில் திவாகர விஸ்வமங்கல முனிவர் இந்தக் குளத்தின் கரையில் அமர்ந்து தவம் செய்திருக்கிறார். அப்போது விஷ்ணுவே சிறுவன் வடிவில் தோன்றி, ஒரு குகைக்குள் ஓடி ஒளிந்ததாக விரிகிறது இந்தக் கோயிலின் தலபுராணம். முனிவர் தங்கியிருந்த குகையில்தான் பபியா முதலையும் வசித்ததாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் அனந்த பத்மநாப சுவாமியின் தூதுவராகவே பபியாவைப் பார்த்தனர். இந்த ஆலயம், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் மூலஸ்தானம் எனவும் போற்றப்படுகிறது. கோயிலின் அர்ச்சகர் திருக்குளத்தைப் பார்த்து பபியா என அழைத்தால் குளத்தில் இருந்து கரைக்கு சாப்பிட வரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE